சனாதனத்தில் வசமாக சிக்கிய திருமா?… உதயநிதியால் விழி பிதுங்கும் விசிக!
Author: Udayachandran RadhaKrishnan7 November 2023, 9:39 pm
கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி, சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு தொடர்பான சர்ச்சை இன்று வரை ஓய்ந்த பாடில்லை.
“இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். இதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியமாகும்” என்று அதிரடியாக அமைச்சர் உதயநிதி பேசியது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இதை வன்மையாக கண்டிக்கவும் செய்தனர். தேசிய அளவில் இன்றளவும் திமுகவுக்கு பெரும் தலைவலியை தரும் விவகாரமாகத்தான் இது உள்ளது.
இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியது போல் திராவிட கொள்கைகளுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜெயசந்திரன் தெரிவித்த கண்டனம் அமைச்சர் உதயநிதியை மட்டுமல்லாமல், திமுகவையே அதிர வைத்துள்ளது.
நீதிபதி கூறும்போது, “சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்கவேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது, போதைப்பொருட்கள், ஊழல், தீண்டாமை, சமூக தீமை ஆகியவற்றை ஒழிப்பது குறித்து பேசுவதில் கவனம் செலுத்தலாம்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது. சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாப்பதற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்கள், அவர்கள் உறுதிமொழியை மீறி செயல்படுவதால், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி இருக்கும்.
இந்நிலையில், திராவிட கொள்கைகளுக்கு எதிரான கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களிடையே நிலவும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் நீதிமன்றமும் தவறிழைக்க முடியாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் திமுக தலைமைக்கு இக்கட்டான நிலையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்த செய்தி பரவலாக ஊடகங்களில் வெளியான நிலையில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ 50 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்திற்காக விசிக தலைவர் திருமாவளவனை, அவருடைய கட்சி அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி சந்தித்து கையெழுத்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்துவது நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை அதிமுகவினரும் ஆதரித்து சட்டப்பேரவையில் வாக்களித்துள்ளனர். அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. இத் தேர்வு ரத்து செய்யப்பட்டால், அந்தப் பெருமை திமுகவுக்கு வேண்டாம். அதை முழுக்க முழுக்க அதிமுகவுக்கே கொடுக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தவறு என்றும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் பேசியதில் தவறு எதுவும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன். அம்பேத்கர், பெரியார், திருமாவளவன் ஆகியோர் சனாதனத்துக்கு எதிராக பேசியதைவிட நான் தவறாக எதுவும் பேசவில்லை” என்றார்.
அமைச்சராக இருந்துகொண்டு மதத்துக்கு எதிராக தவறாக பேசியதாக உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பது குறித்த இன்னொரு கேள்விக்கு, “அமைச்சர் பதவி இன்று வரும், நாளைக்குப் போய்விடும். எம்எல்ஏ பதவி இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும். இளைஞரணி செயலாளர் பதவியும் அப்படித்தான். இவை எல்லாவற்றையும்விட முதலில் மனிதனாக இருக்கவேண்டும். எனவே வழக்கை சட்டப்படி சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்துகளில் நீட் தேர்வு ரத்தானால் அந்தப் பெருமையை அதிமுகவிற்கு விட்டுக் கொடுக்கிறேன் என்று கூறியதும், திருமாவளவன் பேசியதை விடவா சனாதனம் பற்றி நான் அதிகம் பேசி விட்டேன் என்று சொல்வதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த இரண்டுமே கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.
“உதயநிதி அவருடைய தாத்தா கருணாநிதி 1984 தமிழக தேர்தலின் தெரிவித்த கருத்தை போலவே கூறியிருப்பது நல்ல நகைச்சுவை” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
‘ஏனென்றால் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் நியூயார்க் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகத்தை தமிழகத்தில் சில சமூக விரோத சக்திகள் கிளப்பிவிட்டன.
இதன் அடிப்படையில் அந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன். அதனால் தேர்தலில் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று மேடை தோறும் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதை திமுகவினர் மாநிலம் முழுவதும் போஸ்டர்களாக அச்சிட்டும் ஒட்டினர்.
ஆனாலும் அந்தத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி கண்டது. வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய எம்ஜிஆர் 3-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றும் கொண்டார்.
அன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளான கருணாநிதியின் தேர்தல் பிரச்சாரம் போலவே இப்போது உதயநிதி நீட் தேர்வு ரத்தானால் அந்தப் பெருமையை அதிமுகவுக்கு விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்வதும் இருக்கிறது.
அதேநேரம் சனாதன ஒழிப்பு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவர் ஒழிப்பு என்ற வார்த்தையை இணைத்து பயன்படுத்துவதையே அடியோடு தவிர்த்து, வெறும் சனாதனத்தை மட்டுமே எதிர்ப்போம் என்று கூறி வருகிறார். சனாதன ஒழிப்பு என்றால் சிக்கலாகி விடும் என்பதை உணர்ந்து கொண்டு இப்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அவர் பேசுகிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. நான் சொன்ன வார்த்தையை மாற்ற மாட்டேன் என்று கூறும் அவர் அதில் ஒழிப்பு என்ற வார்த்தையை மட்டும் ஏன் தவிர்க்கவேண்டும் என்பதுதான் புரியவில்லை.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தி எதிர்ப்புக்காக இந்திய அரசியலமைப்பு சட்ட எரிப்பு போராட்டத்தை கருணாநிதி அறிவித்தார். ஆனால் அது தண்டனைக்குரிய மற்றும் மக்கள் பிரதித்துவ பதவியை பறிக்கும் குற்றச் செயல் என்பது தெரிந்தவுடன் பின்னர் அதை சட்ட நகல் எரிப்பு போராட்டமாக மாற்றினர். கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு வந்தபோது, நாங்கள் துண்டு காகிதத்தைதான் எரித்தோம் என்று திமுகவினர் நழுவிக்கொண்டனர்.
அதேபோல்தான் அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு இப்போது சனாதனம் என பாதியாக சுருங்கி விட்டது.
அதேநேரம் சனாதனத்துக்கு எதிராக அம்பேத்கர், பெரியார் மற்றும் திருமாவளவன் பேசியதை விடவா நான் அதிகம் பேசி விட்டேன் என்றும் உதயநிதி கூறுகிறார். அம்பேத்கரும், பெரியாரும் இன்று உயிருடன் இல்லை. தவிர பெரியாரின் திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிட்டதும் கிடையாது. அவர் தனது இயக்கத்துக்காக ஓட்டு கேட்டதும் இல்லை. ஆனால் திமுக தேர்தலில் போட்டியிட்டு ஓட்டும் கேட்கிறதே!
என்ற போதிலும் திருமாவளவனை இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஏன் கோர்த்து விடுகிறார் என்றுதான் புரியவில்லை. என்னைப்போல இவரும் பல முறை பேசியிருக்கிறார், இவரையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று போட்டு கொடுக்கிறாரா? என்பதும் தெரியவில்லை.
ஆனால் திருமாவளவனை பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் சனாதன சக்திகளையும், கோட்பாடுகளையும் எதிர்ப்போம், வேரறுப்போம் என்றுதான் ஆவேசமாக குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர நேரடியாக எங்குமே டெங்கு, மலேரியா கொசுவை போல சனாதனத்தையும் ஒழித்துக் காட்டுவோம் என்று அவர் இதுவரை பேசியதாக தெரியவில்லை. தவிர திருமா வளவன் சட்டம் படித்தவர் என்பதால் சட்ட சிக்கல் எதுவும் ஏற்படாத அளவிற்கு பேசுவதில் கவனமாகவும் இருப்பார்.
சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுகள், சாதிய பாகுபாடுகள் இருக்கிறது அதைத் தொடர்ந்து எதிர்ப்போம் என்று அமைச்சர் உதயநிதி கூறுகிறார். பாராட்ட வேண்டிய விஷயம்தான்.
ஆனால் திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல், சேலம் மாவட்டம் திருமலைகிரி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய இடங்களில் சாதிய வன்மம் தலை தூக்கி இருப்பதை மறந்துவிட்டு, உதயநிதி சனாதனம் பற்றி பேசுவதும், அதை அருகில் இருக்கும் திருமாவளவன் கைதட்டி ரசிப்பதும்தான் வேடிக்கையாக உள்ளது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
நீதிமன்றம் ஒரு எதிர்கருத்தை பதிவு செய்த பிறகும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சர் இப்படி பேசுவது சரியல்ல என்ற வாதமும் பொதுவெளியில் வைக்கப்படுகிறது. இதுவும் யோசிக்க கூடிய ஒன்றுதான்!