பாஜக சாதாரண அரசியல் கட்சியல்ல… இது ஒரு எச்சரிக்கை மணி : எதிர்கட்சிகளுக்கு திருமாவளவன் அலர்ட்..!!!
Author: Babu Lakshmanan11 March 2022, 9:01 am
சென்னை : உத்தரபிரதேசம் உள்பட 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த பஞ்சாப், அக்கட்சியின் கையை விட்டு நழுவியது. நீட் விவகாரம், வேளாண் சட்டம் உள்ளிட்ட காரணங்களால் பாஜகவுக்கு இந்த மாநில தேர்தல்களில் தோல்வியே கிடைக்கும் என்று கூறி வந்த எதிர்கட்சிகளுக்கு, தேர்தல் முடிவுகள் பெருத்த அடியாக அமைந்து விட்டது.
4 மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழக கட்சியினரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும், பாஜகவுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் மீண்டும் மீண்டும் முன்னிறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக வெற்றி தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றிக்கு பாஜகவின் ஃபாசிச பெருந்தீங்கு அரசியலை இன்னும் புரிந்துகொள்ளாத எதிர்க் கட்சிகளின் மெத்தனப்போக்கே காரணமாகும். பாஜக சராசரி அரசியல் கட்சியல்ல; பிற்போக்குத் தனமான ஃபாசிச சனாதன பயங்கரவாத சங்பரிவாரின் அரசியல் பிரிவு என்பதை எதிர்க்கட்சிகள் யாவும் உணர்ந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும்; அதற்கு காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு மாற்று சக்தியாக அணிதிரள வேண்டும் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன. 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியே ஆகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவை ஆதரித்து ஒருதரப்பினரும், இனிமேல் இது போன்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று பாஜக உள்ளிட்ட கட்சியினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0
0