பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும்.. எக்காரணத்தை கொண்டும் 2024ம் ஆண்டில் பாஜக ஜெயிக்கக் கூடாது : திருமாவளவன்
Author: Babu Lakshmanan23 January 2023, 9:45 pm
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரன் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சந்திரபோஸ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று முன்தினம் மாலை இயற்கை எய்தினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சந்திரபோஸ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த கொடூரம் ஒவ்வொரு மனிதனுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. வேங்கைவயல் சம்பவத்தை தேசிய அவமானம் என பிரகனப்படுத்தப்பட வேண்டும். குடிநீரில் மனித கழிவை கலந்தவர்களை உடனடியாக தமிழக அரசு கைது செய்யும் என நம்புகிறோம். மனிதக் கழிவு கலந்த குடிநீர் தொட்டியை முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும்.
அனைவருக்கும் பொதுவான குடிநீர் தொட்டியில் ஆதிதிராவிட மக்களுக்கும் குடிநீர் வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இரட்டை குவளை முறை, இரட்டை சுடுகாடு முறை போன்ற சாதிய கொடுமைகள் தொடர்கின்றன. இவற்றை முழுமையாக கண்டறிவதற்கு விசாரணை ஆணையத்தை அரசமைக்க வேண்டும். ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கும் பட்ஜெட் கூட்ட தொடர், பல்வேறு பல்வேறு அரசியல் சவால்களுக்கு இடையே தொடங்கப்படுகிறது.
பாரதிய ஜனதா தலைமையிலான அரசு வெறுப்பு அரசியலை உயர்த்தி பிடிக்கிற நிலையை கண்டிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பண வீக்கம் போன்றவற்று போன்றவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கான சூழல் உள்ளது. 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக ஆயத்த பணிகளில் பாரதிய ஜனதா கட்சி இறங்கியுள்ளது, இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சிதறி போகாமல் ஒன்றாக இணைய வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்த வேண்டும். 2024ம் ஆண்டு தேர்தலில் எக்காரணம் கொண்டும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, அதனை தடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி இல்லாத காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்குறோம். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் போட்டி போட்டுக் கொண்டு பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக இன்று மோடி, அமித்ஷா ஆகியோரால் கட்டுப்படுத்தப்படும் நிலை உள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும், இதற்கான வேலைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்யும், என கூறினார்.
0
0