பிரதமர் வேட்பாளராக திருமாவளவன்..? திமுக, காங்கிரஸ் வைத்த திடீர் ட்விஸ்ட்!

Author: Babu Lakshmanan
29 May 2023, 8:01 pm

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பிறகு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார்? நிறுத்தப்படுவார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முதலமைச்சர்களான நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ் போன்றோர் முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு பாஜகவை வீழ்த்துவோம். ஆட்சியை கைப்பற்றிய பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்பு உற்சாகமடைந்துள்ள காங்கிரஸோ, ராகுலை மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க விரும்புகிறது. தங்களால் 225 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று நம்பும் காங்கிரஸ் 19 எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகிறது.

அதேநேரம் கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, பஞ்சாப், பீகார், மராட்டிய மாநிலங்களில் எது மாதிரியான நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு திறந்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசு தலைவர் தான் உண்மையான தலைவர் என்னும் அங்கீகாரத்தை பெற்றவர். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் அவர் கையெழுத்து இட்டால்தான் சட்டமாகவே நடைமுறைக்கு வருகிறது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புறக்கணிப்பது கடுமையான அவமானம் மட்டுமல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலும் ஆகும்.

குடியரசு தலைவரையும், நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளையும் அவமதிக்கும் வகையில் அவரை புறக்கணித்து விட்டு இந்தத் திறப்பு விழாவை நடத்தும் பாஜக அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அத்துடன், இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறோம்” என்று காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகளும் கூட்டாக அறிவித்தன.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் முதலில் குடியரசுத் தலைவரை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை மட்டுமே எதிர்க்கட்சிகள் வைத்து வந்தன.

ஆனால் அதில் பழங்குடியின வகுப்பின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற வார்த்தைகளையும் சேர்த்தால்தான் அந்த முழக்கம் இன்னும் வீரியமடையும் என்று விசிக தலைவர் திருமாவளவன் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார். அதை அவர்களும் அப்படியே ஏற்றுக் கொண்டும் விட்டனர்.

திருமாவளவன் சொன்ன யோசனைபடிதான், அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒரே நேரத்தில் நாட்டின் முதல் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவரை, மோடி அரசு திட்டமிட்டே புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கத் தொடங்கின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவர் திருமாவளவன் தான். ஆனால் இது பூமராங் போல திரும்ப எதிர்க்கட்சிகளையே போட்டுத் தாக்கி விட்டது.

“கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த போது,நாங்கள் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவரை அனைவரும் ஒருமித்த மனதுடன் தேர்ந்தெடுப்போம் என்று எவ்வளவோ மன்றாடினோம். ஆனால் அன்றோ திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவிற்குதான் எங்கள் ஆதரவு என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் கோரஸ் பாடின.
அப்படி இருக்கும்போது திடீரென்று நாட்டின் குடியரசுத் தலைவர், ஒரு பெண் என்பதும் அவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர் என்பதும் இப்போதுதான் உங்களுக்குத் தெரிந்ததா?” என்று தேசிய பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கிடுக்கு பிடி கேள்வி எழுப்பினர்.

அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் வாயை மூடிக் கொண்டன.

இந்த நிலையில்தான், பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், சந்திரசேகர ராவ், ஸ்டாலின், கெஜ்ரிவால், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் போன்றோர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த விரும்புவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் மூலம் எதிர்கட்சிகளின் முதல் பட்டியல் இன பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து மோடி தலைமையிலான பாஜகவை எளிதில் வீழ்த்தலாம் என்று அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் இப்போதைக்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரபல தலைவர்கள் என்றால் வட மாநிலங்களில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஒருவர் தான் இருக்கிறார். அவர் நாடறிந்த முகம் என்றாலும் கூட சென்ற ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண் என்பதால் திரௌபதி முர்முவைத்தான் ஆதரித்தார்.
தவிர அவரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்து வெற்றி பெற வைத்துவிட்டால் யாரையும் மதித்து நடக்க மாட்டார் என்ற எண்ணம் பல கட்சிகளிடம் உள்ளது.

அதனால் எதிர்க்கட்சிகளின் அடுத்த சாய்ஸ் ஆக இருப்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாக. தென் மாநிலங்களில் பிரபலமடைந்து வரும் திருமாவளவன்தான். சமீபகாலமாக நாட்டின் பட்டியலின மக்களின் ஒரே தலைவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வரும் அவரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்துவதற்கு வாய்ப்பும் உள்ளது.

ஏனென்றால் தென் மாநில முதலமைச்சர்களான ஸ்டாலின், பினராயி விஜயன், சந்திரசேகர ராவ், சித்தராமையா ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். பட்டியல் இன மக்களுக்கு நாட்டில் எந்த மூலையில் அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்காக முதல் ஆளாக குரல் கொடுப்பவர். எனவே அவரை 19 எதிர்கட்சிகளும்
ஆதரிக்கும் வாய்ப்பும் காணப்படுகிறது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் ஒரு சில கட்சிகளோ, தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் தயவில்தான் தேர்தல் வெற்றிகளை பெற்று வருகிறது. அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. எனவே அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவது மிகவும் கடினமாகிவிடும் என்று திருமாவளவனை நிராகரிப்பதாக தெரிகிறது.

“திருமாவளவன் எப்போதுமே தனது கட்சி உயரிய நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் எதிர்க்கட்சிகள் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அதை தனக்கு கிடைத்த நல் வாய்ப்பாக கருதி ஏற்றுக்கொள்ளவே செய்வார்” என்று அரசியல் பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

“பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் எல்லா மாநிலங்களுக்கும் சென்று அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டி இருக்குமே, ஆனால் அவருக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் பேசத் தெரியாதே, அதனால் அவருக்கு சிக்கல் தான் ஏற்படும் என்று வாதிடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அவர் ஆங்கிலத்தில் பேசுவதை, அப்படியே இந்தியில் மொழி பெயர்த்து பேசுவதற்கு மேடையில் ஒருவரை வைத்துக் கொண்டால் எளிதில் சமாளித்து விட முடியும்.

இப்படியெல்லாம் தனக்கு ஒரு வாய்ப்பு உருவாகலாம் என்று நம்பித்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தனது கட்சியின் கிளைகளை விரிவுபடுத்தி வரும் திருமாவளவன் சமீபகாலமாக மராட்டியம், குஜராத் மாநிலங்களிலும் விசிகவை பலப்படுத்தி வருகிறாரோ என கருதவும் தோன்றுகிறது.

ஒருவேளை, திமுக கூட்டணி சார்பில் இந்த முறை சிதம்பரத்தில் போட்டியிட திருமாவளவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது மாநிலத்தில் ஒரு தொகுதியை அவருக்காக ஒதுக்கலாம். ஏனென்றால் கடந்த ஆண்டு பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சந்திரசேகர ராவ் தொடங்கிய போது அதில் கலந்து கொண்ட திருமாவளவனை தனது கட்சி தொண்டர்களிடம் அறிமுகப்படுத்தியபோது இவர் பட்டியல் இன மக்களுக்காக போராடக்கூடிய ஒரு மிகப் பெரிய தலைவர் என்று புகழாரம் சூட்டியிருந்தார். எனவே பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதியை மிஞ்சும் வகையில் திருமாவளவன் பட்டியல் இன மக்களின் மாபெரும் தலைவராக உருவாகவும் முடியும்.

அதனால் 19 எதிர்கட்சிகளும் பட்டியலின மக்களின் முதல் பிரதமர் வேட்பாளர் என்று அங்கீகாரத்துடன் திருமாவளவனை அறிவித்தால் அதை அவர் மறுத்து விடக்கூடாது.

குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவுக்கு திடீரென்று ஆதரவு தெரிவித்து பேசியதால் திருமாவளனனுக்கு இந்த வாய்ப்பு உருவாகிறது என்றால் அது ஒரு ஜாக்பாட்டாகத்தான் அமையும்.
இதுபோன்ற அரியதொரு வாய்ப்பு இனியும் கிடைக்காது என்று கருதி அதை அவர் ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 401

    0

    0