அண்ணாமலை ஒரு அரசியல் நகைச்சுவை மன்னன்.. கூச்சமே இல்லாமல் பேசி வருகிறார்; திருமாவளவன் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 8:34 pm

அண்ணாமலை அரசியல் நகைச்சுவை மன்னன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சனாதான எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவை மாவட்டத்திலிருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. எப்படி சமூக நீதிப் போராட்டம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறதோ அதேபோல சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், கனிம வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்கவும், இந்த தலைமுறை மட்டுமல்லாது அடுத்த தலைமுறையும் தாண்டி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளை கண்டித்தும், ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தியும் வரும் 22 ஆம் தேதி எனது தலைமையில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கிருஷ்ணகிரி சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இது போன்ற சாதிய ஆணவ படுகொலைகள் தொடரக்கூடாது என்பதால், இது போன்ற ஆணவப் படுகொலைகள் தடுப்பு சட்டம் தேவைப்படுகிறது.

மதம் மாறிய தலித் மக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பாஜக கூறுவது அபத்தமானது. இந்த சட்டம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசும் அந்த வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் வாக்கு வங்கி என்ற அடிப்படையில் எதுவும் இல்லை. பாஜக தான் இதை திருத்தி அரசியல் ஆக்க பார்க்கிறது.

ஆணவக் கொலைகள் நடப்பதை மறைக்கப்பட்டு வந்தாலும், இதை தடுப்பதற்கு தனி சட்டம் தேவைப்படுகிறது. அப்படி சட்டம் இயற்றப்பட்டால் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டால், இது போன்ற குற்றங்கள் குறையும். எளிய மக்களிடம் விழிப்புணர்வு இருந்தாலும், இது போன்ற சட்டங்கள் இல்லை என்பது குறைபாடு. எனவே இந்த சட்டம் வேண்டும். இந்த சட்டத்தை இயற்ற மத்திய அரசு இதற்கு தயக்கம் காட்டுகிறது. மாநில அரசு தயக்கம் இன்றி செயல்பட வேண்டும். பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் தமிழக முதல்வர் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியல் அல்ல, சொத்து பட்டியல் என ஊடகங்களில் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்கின்ற பிரமாண பத்திரத்தில் சொத்து பட்டியலை தாக்கல் செய்யப்பட்டிருக்கும். அதை திருடி தான் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார் என எல்லோரோடும் பேசப்படுகிறது. அவரை பொறுத்தவரை ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும். தன்னைப் பற்றி விவாதிக்க வேண்டும் என அதற்காக என்ன விலையும் கொடுப்பார். தவறான பொய்யான அவதூறான தகவல்களை பரப்பி கூச்சம் இல்லாமல் செயல்படுகிறார். சொல்லப்போனால் அண்ணாமலை அரசியல் நகைச்சுவை மன்னன், என விமர்சித்தார்

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!