வெற்றிமாறன் பெரியார் பேரன்… அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு… இது வரலாற்றுத் திரிபாகாதா? திருமாவளவன் ஆதரவு..!!

Author: Babu Lakshmanan
5 October 2022, 3:37 pm

ராஜராஜ சோழன் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடந்த குறும்பட ஆவணப்பட கலைத் திருவிழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- திரைத்துறையை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு மதசார்பற்ற மாநிலமாக உள்ளது. ஒரு சாராரிடம் இருந்த திரைத்துறையை திராவிட இயக்கம் பொதுமைப்படுத்தியது. அதனால்தான் இன்று வெளிப்புற ஆதிக்கம் தமிழகத்தில் ஊடுருவாமல் இருக்கும் பக்குவத்தை இந்த மாநிலம் பெற்றிருக்கிறது.

தமிழ் மன்னன் ராஜராஜனை இந்து அரசனாக காட்டுவது, திருவள்ளுவருக்கு காவியுடை அணிவிப்பது போன்ற செயல்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாத, என பேசினார்.

இயக்குநர் வெற்றிமாறனின் இந்த பேச்சு பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் பதிலடி கொடுத்தார். அதாவது, சிவபெருமானை இந்து இல்லை என்று சொல்வதற்கான தைரியத்தை யார் கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய அவர், இந்துக்களுக்கு எதிரான வன்மத்தை வெற்றிமாறன் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அந்நிய மதங்களை இந்த மண்ணில் புகுத்த, இந்து மதத்தை அழிக்க பல ஆண்டுகளாக சதி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர்.

இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர் மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.
அவர் பெரியாரின் பேரன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!