பிரதமர் மோடிக்கு இது நல்லதல்ல… தமிழக அரசை கொச்சைப்படுத்தும் ஆளுநர் ஆர்என் ரவி ; திருமாவளவன் குற்றச்சாட்டு..!!!
Author: Babu Lakshmanan23 August 2023, 12:03 pm
அதிமுக – பா.ஜ.க கூட்டணி இருக்கும் வரை எத்தனை மாநாடு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும் அதிமுகவுக்கு பின்னடைவை தான் தரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குத்து விளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் புகைப்படத்திற்க்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இது அவரின் அகந்தை போக்கை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிகவும் கொச்சைபடுத்துகின்றார். ஆளுநர் அரசுக்கு எதிராக செயல்படுவது திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திட முடியும் என ஆளுநர் கருதுவது வேடிக்கையாக இருக்கின்றது.
இந்திய பிரதமரும், ஒன்றிய அரசும் தமிழக ஆளுநரின் போக்கை வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. தமிழக ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தொடர்ந்து அவமதிப்பதும், அலட்சியப்படுத்துவதும் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை இது காயப்படுத்துவதாக உள்ளது.
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மறு உறுதி செய்திட இந்த மாநாடு நடைபெற்றது, இந்த மாநாடு தமிழ்நாடு மக்கள் நம்பிக்கையை பெறுவதாக அமைந்திடவில்லை. தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை, அதிமுக மதுரை மாநாட்டில் நடைபெற்ற கூத்து பொதுமக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டனியில் உறவில் இருக்கும் வரையிலும், கூட்டணியில் தொடர்கிற வரையிலும் அதிமுக எத்தனை மாநாட்டு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும், அது பின்னடைவாக தான் போய் முடியும், என தெரிவித்தார்.