12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; பள்ளி தாளாளர் கைது… போராட்டக்களமான திருநின்றவூர்… தனியார் பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை!

Author: Babu Lakshmanan
23 November 2022, 6:59 pm

சென்னை : திருநின்றவூரில் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு, அப்பள்ளியின் தாளார் வினோத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 12ம் வகுப்பு மாணவிகளில், சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தேர்வு செய்து, அவர்களை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போராட்டக் களமாக காட்சி அளித்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சென்னை திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!