வேன் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 8 பேர் பலி : கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
Author: Babu Lakshmanan2 April 2022, 6:13 pm
திருப்பத்தூர் அருகே கோயிலுக்கு சென்ற டாட்டா ஏசி ஆட்டோ 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒரு பள்ளி மாணவி உட்பட 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேரந்தவர்கள் 28 பேர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏசி வாகனம் மூலம் சென்றனர். அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சுகந்தா (55), துர்கா (40), பரிமளா (12), பவித்ரா (18), செல்வி (35), மங்கை (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி 16 வயது ஜெயப்பிரியா என்ற பெண், மற்றும் சின்னதிக்கி ஆகிய இரண்டு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் அருகே மலைப் பகுதியில் கோயிலுக்கு டாட்டா ஏசி வாகனம் மலை மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே ஊரை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவம் குறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா விபத்தில் சிக்கியவர்களை பார்த்து ஆறுதல் கூறி மற்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார்.
இதனிடையே, ஜவ்வாது மலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.