‘என்ன கொடுமை சார் இது..?’ குடிநீர் குழாய் திட்டத்தில் முறைகேடு.. வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது வழக்குப்பதிவு..!

Author: Babu Lakshmanan
24 November 2022, 10:14 am

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருகே கிராமம் முழுவதும் வீட்டுக்கு வீடு செட்அப் குழாய்களை அமைத்து முறைகேடு செய்ததாக வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக, வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டது. அதன்பேரில், கான்ட்ராக்டர்கள் வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். விரைவில் பணிகள் முடிந்து வீடுதோறும் தண்ணீர் குழாய் இணைப்பு கிடைத்து விடும் என்று அக்கிராம மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், நடந்ததோ வேறு. பெயரளவுக்கு மட்டும் குழாய்களை அமைத்து விட்டு, இணைப்பு ஏதும் வழங்காமல் சென்றுள்ளனர் கான்ட்ராக்ட்காரர்கள். அதிலும், இக்குழாய் அமைத்ததற்காக வரி விதிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

குழாய் நீர் இணைப்பு கொடுக்காமல், வெறும் செட்அப் மட்டுமே கான்ட்ரக்டர்கள் செய்து விட்டு சென்றதாகவும், மண்ணில் சிறிதளவு புதைத்து விட்டு, கீழே குழாய்களை இணைக்காமல் போட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்ற இளைஞர், செட் அப் குழாயை கையால் பிடித்து இழுப்பதும், அது அப்படியே வெளியே வருவது போன்ற வீடியோவை வெளியிட்டு, குழாய் அமைப்பதில் நடந்த முறைகேடுகளை வீடியோவாக வெளியிட்டார்.

ரூ.3.69 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழாயில், தண்ணீர் மட்டுமல்ல, காற்று கூட வராது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், முறைகேடுகளை அம்பலப்படுத்திய இளைஞர் மீது அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் முரளி கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!