போலீஸ பகைச்சுக்காதீங்க… பேசாம ரூ.6 லட்சத்த வாங்கிக்கோங்க… பேரம் பேசிய போலீஸ் : உயிரிழந்த விசாரணை கைதியின் மகன் பகீர் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 6:06 pm

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 26ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து மறுநாள் காலை அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். வலிப்பு நோய் வந்ததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் கூறி வந்தாலும், காவல்துறையினர் அவர் கடுமையாக தாக்கியதால்தான் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த மரணம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்க சென்ற போது, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் கதவுகளை மூடியதுடன், அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, 2 லட்சம் ரூபாய் கேட்டு போலீஸ் அதிகாரி மிரட்டியதாகவும், தர மறுத்ததால் தனது தந்தையை அடித்தே கொலை செய்துவிட்டதாக உயிரிழந்த தங்கமணியின் மகன் தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக எதிர்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகளின்படி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், உயிரிழந்த தங்கமணியின் உடலை பெற்றுக் கொள்வதற்காக, குடும்பத்தினரிடம் போலீசார் பேரம் பேசியதாக அவரது மூத்த மகன் திருமூர்த்தி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, காவல்துறையினர் தாக்கியதால் தந்தை சிறையிலேயே உயிரிழந்து விட்டதாகவும், உடலைப் பெற்றுக் கொண்டு அமைதியான முறையில் செல்ல போலீசார் இரவு பகலாக பேரம் பேசுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சத்தில் ஆரம்பித்த இந்த பேரம் ரூ. 6 லட்சம் வரையில் சென்றதாகவும், பேரம் பேசுவதற்காக, டிஎஸ்பி அண்ணாதுரை, முத்துக்குமார் எஸ்ஐ உள்பட சில போலீசார் வந்திருந்தாகவும் கூறினார். மேலும், போலீஸை பகைத்துக் கொள்ளாமல், கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு செல்லுமாறு காவல்துறையினர் மிரட்டல் விடுத்ததாகவும் உயிரிழந்த தங்கமணியின் மகன் புகார் தெரிவித்துள்ளார்.

விசாரணை கைதி தங்கமணி சிறை மரணம்தான் என்று குற்றம்சாட்டி வரும் நிலையில், போலீசார் இதுபோன்று பேரம் பேசுவது, காவல்துறையினர் மீதான தவறை மறைப்பதற்காகத்தான் என்பது தெள்ளத் தெளிவாகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!