தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் டெங்கு… காய்ச்சலுக்கு பெண் பயிற்சி மருத்துவர் பலி ; பீதியில் மக்கள்..!!
Author: Babu Lakshmanan15 September 2023, 9:47 am
திருவாரூரில் பெண் பயிற்சி மருத்துவர் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மூன்று பேருக்கு அதற்கான அறிகுறிகள் உள்ளதால் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்கென தனி பிரிவு தொடங்கப்பட்டு, உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பசும்பாரா பகுதியை சேர்ந்த அவர், டாக்டர் படிப்பை முடித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.