இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் இந்த விடியல் பரவ வேண்டும் : கர்நாடகாவின் புதிய அரசுக்கு முதலமைச்சர் வாழ்த்து!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 4:50 pm

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி, புதிய முதல்வராக சித்தராமையாவை அறிவித்துள்ளது. இதன் மூலம் 2வது முறையாக மீண்டும் முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இந்த பதவியேற்பு விழா இன்று பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டு சென்றார். விழாவில் கலந்துகொண்டு முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட சித்தராமையாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது ” கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சித்தராமையா அவர்களுக்கும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!