இது ஒண்ணும் கோபாலபுர குடும்ப பதவி இல்லை.. ஒத்துக்கொண்டதற்கு நன்றி : மீண்டும் அமைச்சர் பிடிஆரை சீண்டிய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2024, 2:06 pm

இது ஒண்ணும் கோபாலபுர குடும்ப பதவி இல்லை.. ஒத்துக்கொண்டதற்கு நன்றி : மீண்டும் அமைச்சர் பிடிஆரை சீண்டிய அண்ணாமலை!!

அயலக தமிழர்கள் மாநாடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு கலந்துரையாடல் அமர்வுகள் நடந்தன. அதில் “ஒளிரும் எதிர்காலம் – வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருப்பொருளில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெளிநாடு வாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது.

“பாரதி கூற்றுப்படி அனைத்து இடங்களுக்கும் தமிழர்கள் செல்ல வேண்டும் என்றால் நாம் அனைத்து மொழிகளையும் படிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள் எனக் கூறுவதை விட்டுவிட்டு அனைத்து மொழிகளையும் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். பல மொழிகளை பயிற்றுவிக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை தமிழக அரசு ஏன் தடுக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர், சிபிஎஸ்இ பாடத்திட்டம் மத்திய வாரியத்தால் செயல்படுத்தப்படுகிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்திற்கு என ஒரு கல்விக் கொள்கை உள்ளது என்றார். மேலும் நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள் என்று பிடிஆர் கேட்டார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத அந்த நபர், தான் ‘குளோபல் சிட்டிசன்’ என்று பதிலளித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில். நானும் திராவிடன்தான், என் பெயர் கருணாநிதி தான் என்று கூறி தன்னை பேச விடாமல் செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என வாக்குவாதம் செய்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதனை பகிர்ந்து கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஏன் எதிராக உள்ளது என கேள்வி கேட்டவருக்கு பதில் அளிக்காமல், தங்களின் தவறான கொள்கையை அம்பலப்படுத்தினார் என்பதற்காக அமைச்சரால் மிரட்டப்பட்டு அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டார்” என்று குற்றம்சாட்டினார்.

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர், “முதல் பாதியை மட்டும் பார்த்தவர்களுக்காக இரண்டாம் பாதிக்கான வீடியோவை இணைத்துள்ளேன். அண்ணாமலை அரை உண்மைகள், திரிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் முழுப் பொய்களையும் பரப்பி தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை தொடர நினைக்கிறார். தான் பதிவு போடும் முன்பு அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்ற அக்கறையெல்லாம் அவருக்கு கிடையாது” என்று விமர்சித்தார்.

மேலும், கூட்டத்தில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. ஒவ்வொரு முறையும் நான் “வெய்ட்” என்று சொல்லும் போது, கேள்வி கேட்டவருக்கு பதிலளிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நபர் தனது இருக்கைக்குத் திரும்பி, எனது அமர்வு முடியும் வரை அங்கேயே இருந்ததோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த அமர்வுகளிலும் கலந்து கொண்டார் என அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிடிஆருக்கு மீண்டும் பதில் அளித்துள்ளார் அண்ணாமலை. இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் செயல்திட்டத்திற்கும், செயலிழந்த பிரச்சாரத்திற்கும் பொருந்தாததால், முழு உண்மைகளும் உங்களுக்கு எப்போதும் அரை உண்மையாகவே தோன்றும். மேலும், கோபாலபுரம் குடும்பத்தின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நீங்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நேரத்தில் உங்கள் போராட்டத்தை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறேன்.

இந்த முழு அமர்வின் வீடியோவையும் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை, ஏனெனில் இது உங்கள் சுய விளம்பரம் மற்றும் முன்னோர்களின் புகழ்ச்சியுரைகளின் கலவையாக மட்டுமே இருக்கும். இதற்காக ஏன் எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும்? புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு இன்று படிப்படியாகச் செயல்படுத்துவது போல், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3வது விருப்ப மொழி கற்பிக்கும் நாள் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், தமிழக பாஜக தலைவர் பதவி நிரந்தரம் இல்லை என்றும், கோபாலபுரம் குடும்பத்திற்கு என்றே ஒதுக்கப்பட்ட அறிவாலயத்தில் உள்ள நாற்காலியைப் போல் அல்லாமல், எதிர்காலத்தில் பலரும் பாஜக தலைவர் பதவிக்கு வருவார்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்கும் நன்றி.” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan's love story நயன்தாரா வீடியோ லீக்…படையெடுக்கும் ரசிகர்கள் ..!
  • Views: - 291

    0

    0