இது கட்சி கூட்டம் அல்ல.. மக்களவை : பொய்களை பரப்பும் திமுகவினர்.. கனிமொழிக்கு ஆதாரத்துடன் அண்ணாமலை பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 9:03 pm

மக்களவையில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டிய திமுக எம்.பி. கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், திமுக அரசியல்வாதிகள், கட்சிக் கூட்டங்கள் என்று நினைத்து பொய்களைப் பரப்புவதற்கும், உண்மைகளை திரித்துக் கூறுவதற்கும், நாடாளுமன்ற அரங்கைப் பயன்படுத்துவது வழக்கம். திமுக எம்பி கனிமொழியும் நேற்று மக்களவையில் தனது கட்சியின் நீண்டகால வழக்கத்தையே பின்பற்றியிருப்பதில் ஆச்சரியமில்லை.

உதாரணமாக, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்குவதில் திமுகவின் பங்கு என்னென்ன என்றெல்லாம் கனிமொழி பேசியிருக்கிறார். உண்மையில் திமுகவின் பங்கு என்னென்ன என்று பார்ப்போம்.

சமீபத்தில் புதுக்கோட்டையில் பட்டியலின சகோதர, சகோதரிகள் பயன்படுத்தும் குடிநீரில், மனித மலம் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். பல மாதங்கள் கடந்தும், தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக அமைச்சர் ஒருவர் பொது மேடையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதி ஒருவரை, ஜாதியின் பெயரைக் கூறி இழிவுபடுத்தியதைக் கண்டோம்.
சமீபத்தில், சேலத்தில் ஒரு திமுக பிரமுகர், ஒரு இளைஞரை ஜாதிய ரீதியாக அவதூறாகப் பேசியதும், அவரை கோவிலுக்குள் நுழைய விட மறுப்பதும் கண்டோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின கிராம பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது கொடிகளை ஏற்றவிடாமல் தடுப்பது, திமுக ஆட்சியில் தொடர்கதை ஆகியிருக்கிறது.

திமுக மக்களவை எம்பி ஆ.ராஜாவின், பட்டியல் இன சகோதர சகோதரிகள் பற்றிய பேச்சு, தேசிய அளவில், மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியதைக் கண்டோம்.

திமுக மக்களவை எம்பி டிஆர் பாலு, இந்து கோவில்களை இடிப்பதில் பெருமையடைகிறார். மற்றொரு திமுக எம்பியான தயாநிதி மாறனுடன் சேர்ந்து, கடந்த காலங்களில் அவர், தாங்கள் தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தப்பட்டதாகக் கூறி கலகம் செய்தார்.
இது போன்ற கடந்த 20 மாதங்களில், திமுகவின் சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சாதனைகள் பட்டியல், ஒரு பத்திரிகையின் 20 பக்கங்களை நிரப்பும்.

20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதப்படுத்துவதாகக் கனிமொழி கூறியிருக்கிறார். கடந்த வாரம் வரை 15 ஆக இருந்த எண்ணிக்கையை, அவரது சகோதரரான தமிழக முதல்வர் தற்போது 20 ஆக உயர்த்தியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக பாஜக, ஏற்கனவே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவரம் குறித்து தெளிவுபடுத்தியிருந்தது.

தமிழக முதல்வர் தன்னைத் தானே பல்கலைக்கழக வேந்தராக நியமித்த 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன

அரசாங்கத்திற்கு தேவையற்ற அதிகாரங்களை வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விதிகளில் திருத்தம் தொடர்பான ஒரு மசோதா

எந்தவொரு தனியார் கல்லூரியையும் கையகப்படுத்த விரும்பும் தமிழக அரசாங்கத்தின் விதியை திருத்தும் ஒரு மசோதா

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான ஒரு மசோதா.

மத்திய அரசு நுழைவு பட்டியலில் எப்படி ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு எவ்வாறு நிறைவேற்றியது என்ற தமிழக ஆளுநரின் கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்து விட்டதா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்.

கனிமொழி உள்ளிட்ட திமுக எம்பிக்கள், முரசொலியை மட்டும் படிக்காமல், கடந்த காலங்களில் இந்த உண்மைகளை வெளியிட்ட மற்ற செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாராளுமன்ற உரைகளில், திருக்குறளைக் குறிப்பிடுவதில்லை என்று பாஜக மேல் கனிமொழி குற்றச்சாட்டினார். காசி தமிழ்ச் சங்கத்தின் போது, பிரதமர் மோடி, திருக்குறளை 13 மொழிகளில் வெளியிட்டார். சமீபத்தில் முடிவடைந்த தேர்வும் தெளிவும் நிகழ்ச்சியில், பிரதமர் தமிழ் மொழியைப் புகழ்ந்திருந்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இதற்கிடையில், திருவள்ளுவர் சிலையை விட ஒரு அடி அதிக உயரமுள்ள பேனா சிலையை வைக்க, தனது கட்சி ஏன் விரும்புகிறது என்பதை விளக்குவதற்கு கனிமொழி முன்வருவாரா?

திமுக எப்போதுமே தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல், மேற்குலகில் நம்பிக்கை வைப்பது போல, கனிமொழி, அயர்லாந்து மற்றும் ஜெர்மனியில் இருந்து NGO-க்கள் வெளியிட்ட உலக பசி குறியீடு – அட்டவணையில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. வெறும் 3000 பேரிடம் மட்டுமே கணக்கு எடுக்கப்பட்ட, தவறான தரவுகளால் உருவாக்கப்பட்ட அந்த அட்டவணை, நமது மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கோவிட் தொற்றுநோய்களின் போது தீவிர வறுமை அதிகரிப்பதைத் தடுத்த, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியதை திமுக எம்பிக்கள் மறந்துவிட்டனர்.

இத்துடன் நின்றுவிடவில்லை. கனிமொழி தங்கள் கட்சியின் பொய்கள் மற்றும் திரித்த உண்மைகளின் வரிசையில், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆனால், அவரது கட்சியோ, டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த திமுக, அதை மறந்து விட்டது.

தமிழக அரசில், இளைஞர்களுக்கு 5.5 லட்சம் வேலை வழங்குவதாக திமுக வாக்குறுதி அளித்தது. அதைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை.

ஜூன் 2022ல், பிரதமர் மோடி அவர்கள், நமது நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே 2.17 லட்சம் இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணையையும் வழங்கியுள்ளார். பழங்குடியினர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்ற கனிமொழியின் பேச்சை, நமது நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர், திரௌபதி முர்மு ஏற்றுக்கொள்ள மாட்டார். சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு என்ற திமுக எம்.பிக்களின் வழக்கமான திசை திருப்பும் உரைகளை விட்டு விட முடியாது. பின்வருவனவற்றிற்கு விளக்கமளிக்க, கனிமொழியை கேட்டுக்கொள்கிறோம்.

திமுக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த காலமான 2006 – 2014, 8 ஆண்டுகளில் செம்மொழிகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு சமஸ்கிருதத்திற்கு ரூ.675.36 கோடியும், தமிழுக்கு ரூ.75.05 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இந்த வித்தியாசம் என்பதை, திமுக தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்.

இறுதியாக, திமுக எம்பி கனிமொழி, 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களில் குறைவான ஒதுக்கீடு என்று புகார் கூறியிருக்கிறார். ஆனால், 2023-24 ஆண்டில், தமிழகத்திற்கான ரயில்வே பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சராசரியை விட, ஏழு மடங்கு அதிகம்.

தமிழகத்தில் தற்போது ரூ.30,961 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, பட்டியலின சகோதர, சகோதரிகளின் நலனுக்காக, 13 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் தமிழக அரசு செலவிடவில்லை என்பது குறித்து தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம்.

தமிழக அரசிடம் இருந்து, இன்னும் எங்களுக்குப் பதில் வரவில்லை. கனிமொழி, தகுந்த பதிலளிப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 417

    0

    0