ஒருதலைபட்சமாக செயல்படும் கேஎஸ் அழகிரி… பணம் வாங்கிக் கொண்டு கட்சியில் பொறுப்புகள் : அதிருப்தி காங்., பிரமுகர் கடும் விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan19 November 2022, 10:13 am
கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்படுவதாகவும், மாநிலத் தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் காமராஜ். அவர் நேற்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது ;- காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை. பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புகள் போடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்காமல் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 15ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எவ்வித ஆலோசனை நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை.
மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார். கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை. தனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன், என தெரிவித்துள்ளார்.