ஜெயலிலதாவின் சேலையை கிழித்தவர்கள்.. திரௌபதியை பற்றி பேசலாமா? நிர்மலா சீதாராமன் ஆவேசம்.. அண்ணாமலை ரியாக்ஷன்!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2023, 6:14 pm
மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி முன்வைத்த விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார்.
நேற்று மணிப்பூர் விவகாரத்தில் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, சிலப்பதிகாரம் மற்றும் திரெளபதியை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். அதேபோல இன்று பேசிய டி.ஆர்.பாலு, எய்ம்ஸ் குறித்து பேசியிருந்தார். இருவர் பேச்சுக்கும் வரிக்கு வரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து பேசினார்.
செங்கோல் குறித்து பேசுகையில், காங்கிரஸ் தான் செங்கோலை தூக்கி எறிந்து மூலையில் போட்டது. அதனை மீட்டு உரிய இடத்தில் நிலைநாட்டியவர் பிரதமர் மோடி. அத்துடன் சிலப்பதிகாரம், திராவிடத்தை மறுக்கிறது; அந்தணர் எதிர்ப்பை மறுக்கிறது என்பதற்கு ம.பொ.சி.யின் பேச்சை மேற்கோள் காட்டினார் நிர்மலா சீதாராமன்.
தமிழர் பாரம்பரியம், பண்பாடு தொடர்பாக பேசுகையில் காசி தமிழ் சங்கமம், தமிழர் புத்தாண்டு கொண்டாட்டங்களை சுட்டிக்காட்டிய அவர், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை காட்டு மிராண்டித்தனம் என சொல்லி தடை செய்தது காங்கிரஸ்; அதனை மீட்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு என்றார்.
1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் சேலை கிழித்து அவமானப்படுத்திய கட்சி திமுக. அப்போது சபையை விட்டு வெளியேறிய ஜெயலலிதா இனிமேல் முதல்வராகத் தான் இந்த சபைக்கு வருவேன் என சபதம் செய்தார். அதே போல 2 வருடங்கள் கழித்து முதல்வராக அந்த சபைக்கு சென்றார். இவ்வாறு அநீதி இழைத்தவர்கள் திரெளபதியை மேற்கோள் காட்டலாமா? அநியாயம் என்றார்.
நிர்மலா சீதாராமன், இதனை தெரிவித்த போது திமுக எம்பிக்கள் ஜெயலலிதா நடத்தியது நாடகம். ஏனெனில் அவர் நடிகை என கிண்டலடித்தனர்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்ட அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் சட்டசபையில் எப்படி நடத்தினார்கள் என்பதை கனிமொழிக்கு நியாபகப்படுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என தெரிவித்துள்ளார்.