உள்நோக்கத்துடன் குண்டர் சட்டம்! CM ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் செக்?…
Author: Udayachandran RadhaKrishnan23 December 2023, 9:19 pm
திமுக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த அதிர்ச்சியில் இருந்தே முதலமைச்சர் ஸ்டாலினும், திமுகவினரும் இன்னும் மீண்டதாக தெரியவில்லை.
ஏனென்றால் உயர்நீதிமன்ற தீர்ப்பு காரணமாக பொன்முடியின் அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியால் உருவான தலைவலியே இதுவரை திமுகவிற்கு தீராத நிலையில் பொன் முடியும் அதே நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் உதயநிதியையும், கனிமொழி எம்பியையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பியதும், நீங்கள் ஜெயிச்சதுக்கு பிறகு எங்க ஊர் பக்கமே எட்டிப் பார்க்கலையே என்று கனிமொழியிடம் பெண்கள் கோபத்துடன் கொந்தளிக்கும் வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி திமுக தலைமையை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டு இருக்கிறது.
இந்த பரபரப்புக்கு இடையேதான் சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் சாட்டையை சுழற்றி திமுக அரசுக்கு ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது. இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் எ.வ. வேலுவுக்கும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக அமைதி வழியில் போராடிய கிருஷ்ணகிரி விவசாயி அருள் ஆறுமுகம் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு கிடைத்த பலத்த குட்டு என்றும் கூட இதைச் சொல்லலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
இந்த சிப்காட்டின் 3-வது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப் போவதாக திமுக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், அவர்கள் மீது பதிவான 11 வழக்குகளின் அடிப்படையில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 7 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு அதிமுக, பாஜக, பாமக, அறப்போர் இயக்கம் ஆகியவை தெரிவித்த கடும் கண்டனம் காரணமாக 6 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்ற திமுக அரசு, அருள் ஆறுமுகத்தின் மீதான சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.
டிசம்பர் 22ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “அருள் ஆறுமுகம் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கோ மக்களை தூண்டிவிட்டு சிப்காட் திட்டத்திற்கு எதிராக செயல்பட்டார் என்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை.
நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு, போராட்டம் நடத்த ஒருங்கிணைப்பு செய்ததற்காக, அவருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. போராட்டத்தில் பங்கேற்கும்படி மக்களை மிரட்டியதாகவும், நிலம் கொடுக்க முன்வந்தவர்களை தடுப்பதாகவும், அருள் ஆறுமுகத்துக்கு எதிராக குற்றம் சாட்டுகின்றனர். அமைதியான முறையில் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை, அருள் ஆறுமுகம் செய்துள்ளார். 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான், அனைத்துக் குற்றச்சாட்டுகளும் வந்துள்ளன. பழிவாங்கும் விதமாக, அருள் ஆறுமுகத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம்.
எனவே மேல்மா சிப்காட் விரிவாக்க நிலம் கையாகப்படுத்தும் திட்டம் தொடர்பான விவரங்கள், அதற்கான கருத்து கேட்பு கூட்ட விசாரணை ஆவணங்களை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்” என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தியும் வைத்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் இறுதி தீர்ப்பை வழங்கவில்லை என்றாலும் கூட விவசாயி அருள் ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி இருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் எ வ வேலுவுக்கும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் காவல்துறையை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஸ்டாலின், விவசாயி அருள் ஆறுமுகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக அமைச்சர் எ வ வேலு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இங்கே வந்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்பாக எழுப்பியதுடன் அவர்தான் மேல்மா விவசாயிகளை போராடத் தூண்டி விடுகிறார் என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.
மேலும் செய்யாறு பகுதி விவசாயிகள் எதிர்காலத்தில் அரசுக்கு எதிரான இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எழுதிக் கொடுத்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு அதை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்து ஆறு பேர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை அமைச்சர் ரத்து செய்ய வைத்தும் விட்டார். ஆனால் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை மட்டும் ரத்து செய்யவில்லை.
“இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 2018ம் ஆண்டு சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக அதிமுக அரசு விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்திய போது அப்போதும் அருள் ஆறுமுகம் விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்காக 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது பிப்ரவரி மாதம் அருள் ஆறுமுகத்துக்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாராட்டு விழாவும் நடத்தி இருக்கிறார்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“மேலும் அந்த விழா மேடையில் முன் வரிசையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருந்த அருள் ஆறுமுகத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஸ்டாலின் பாராட்டி பேசியும் இருக்கிறார்.
அமைச்சர் எ வ வேலு, விவசாயி அருள் ஆறுமுகம் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டேபோன நிலையில், அறப்போர் இயக்கம் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அருள் ஆறுமுகத்தை புகழ்ந்து பேசிய வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்போதும் கூட அமைச்சர் எ வ வேலு இந்த வீடியோ குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் அருள் ஆறுமுகம் விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்தியதும் அதை தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையிலேயே அரங்கேற்றிக் காட்டியதும் அவருக்கு பெருத்த எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்திவிட்டது, போலவே தெரிகிறது.
அதனால்தான் நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது அவருக்கு பாராட்டு விழா நடத்தினோமே, இப்போது நமது ஆட்சியில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைகிறோமே இது சரியா, தவறா? என்ற கேள்வியே அமைச்சரிடம் எழவில்லை. அருள் ஆறுமுகம் ஏதோ அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியது போல் கருதி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்யவும் இல்லை.
இப்படி எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருவிதமாகவும், ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறொரு விதமாகவும் நடந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினும், திமுகவும் இரட்டை வேடம் போடுவதையே இது காட்டுகிறது. நமது ஆட்சிக்கு எதிராக யாருமே அமைதி வழியில் போராடக்கூடாது, என்று திமுக அரசு கருதினால் அது தப்பு கணக்காகவே அமையும்.
ஏனென்றால் சென்னையிலும் அதன் புறநகர் மாவட்டங்களிலும் டிசம்பர் 4ம்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் தங்களது பல லட்ச ரூபாய் மதிப்புள்ள உடமைகளை 25 லட்சம் மக்கள் பறிகொடுத்து பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டனர். அதேபோல் கடந்த 16, 17,18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதீத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடியது மற்றும் காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றால் 20 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பு அவர்களை பொருளாதார ரீதியாக 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றும் விட்டது.
இதனால்தான் அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, எ வ வேலு, கனிமொழி எம்பி ஆகியோரை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலையும் ஏற்பட்டது. சென்னை நகரிலும் இதேபோல திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சென்னை நகர மேயர், கவுன்சிலர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு மிக தாமதமாக வந்தபோது அவர்களுக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து தங்களது எதிர்ப்பை காட்டி கடும் வாக்குவாதத்திலும் ஈடுபடவும் நேர்ந்தது.
அதேபோல்தான் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் தங்களது எதிர்ப்பை துணிந்து காட்டுவார்கள். அதற்கு விவசாயி அருள் ஆறுமுகம் விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்த கருத்தே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நானும் ஒரு டெல்டாக்காரன்தான் என்று அவ்வப்போது பெருமைப் பட்டுக்கொள்ளும் தமிழக முதலமைச்சருக்கு இது புரிந்தால் சரிதான்!