வாரிசை கையில் எடுத்த பாஜக… துணிவை வைத்து பதிலடி கொடுக்கும் திமுக.. டுவிட்டரில் ரணகளம்!!
Author: Babu Lakshmanan12 January 2023, 2:36 pm
சென்னை : வாரிசு, துணிவு படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் படங்களின் வசனங்களை வைத்து திமுக – பாஜக டுவிட்டரில் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என். ரவி, திமுக அரசு தயாரித்து கொடுத்த உரையில், திராவிட மாடல், தமிழகம் அமைதிப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை தவிர்த்துள்ளார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவையின் மரபை மீறியதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆளுநர் ஆர்என் ரவியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில், பொய்யான அறிக்கையை தயார் செய்து கொடுத்தால், ஆளுநர் அதனை எப்படி படிப்பார்..? என்று பாஜக உள்ளிட்ட கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழக திரையுலகின் முக்கிய ஸ்டார்களான நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்தின் துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த சில வருடங்களாக, நடிகர் விஜய் தனது படங்களில் அரசியலையும் புகுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், வாரிசு படத்திலும் அரசியல் சம்பந்தமான காட்சியோ, வசனங்களோ இடம்பெறுமா..? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்தது.
அதற்கேற்றாற் போல, “5 நிமிடத்தில் ஆட்சியே மாறலாம்” என்று நடிகர் விஜய் பேசிய வசனம் சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. இந்த வசனத்தை பாஜகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
குடியரசு தலைவரின் பிரதிநிதியான ஆளுநரை பகைத்துக் கொண்டால், திமுகவின் ஆட்சி காணாமல் போகிவிடும் என்றும், ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், திமுகவே தனது ஆட்சிக்கு வேட்டு வைத்துக் கொண்டதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாஜகவினர் விஜய் வசனத்தை வைத்து ஆளுநருக்கு ஆதரவாக டுவிட்களை போட்டு வரும் நிலையில், துணிவு படத்தில் நடிகர் அஜித் பேசிய வசனத்தை வைத்து, ஆளுநருக்கும், பாஜகவினருக்கும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
துணிவு படத்தில் ‘ரவீ’ந்தர் ரவீந்தர்.. இது தமிழ்நாடு, இங்க வந்து உன் வேலைய காட்டாதே!” என்று சமுத்திரக்கனி பேசும் டையலாக்கை திமுகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
திமுக அரசை நேரடியாக சட்டப்பேரவையில் எதிர்த்து விட்டு ஆளுநர் ஆர்என் ரவி வெளிநடப்பு செய்துள்ள நிலையில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனம் கணகச்சிதமாக பொருந்துவதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
துணிவு, வாரிசு படம் அந்த நடிகர்களின் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோ இல்லையோ, இந்த வசனங்களால் அரசியல் கட்சியினரிடையே நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது என்பதே நிஜம்.