முதல்வர் ஸ்டாலின் மருமகனுக்காக திருச்செந்தூர் கோவில் நடை அடைப்பு : 5 மணி நேரம் யாகம் நடத்திய சபரீசன்… கொந்தளித்த பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 11:43 am

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வள்ளி குகை கோவில் செல்லும் நடைபாதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் 5 மணி நேரமாக சிறப்பு யாகம் நடத்துவதால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் பல்வேறு யாகங்கள் வளர்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று இரவு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்தார். இன்று அதிகாலை வள்ளி குகை செல்லும் நடை பாதையை மறித்து சத்ரு சம்கார லட்சார்ச்சனை ஹோமம் நடத்தினார்.

இதனால் பக்தர்கள் வள்ளி குகைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரமாக காத்திருந்தனர். வெகுநேரம் காத்திருந்த பக்தர்கள் கோவில் தனியார் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் தர்மபுரி எம் பி செந்தில்குமார் பூமிபூஜை நிகழ்ச்சியில் இந்து அர்ச்சகரை கொண்டு பூஜை செய்வதற்காக அதிகாரிகள் மீது கோபம் கொண்டு திட்டினார்.

திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் சமம் என்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரையும் அழைத்து நடத்த வேண்டும் என அதிகாரி மீது கோபம் கொண்டார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பரிகார பூஜைக்காக இந்து அரசர்கள் கொண்டு தனியாக யாகம் நடத்தியது கடும் கேள்விகுள்ளாக்கி இருக்கிறது.

மேலும் திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம், சமூக நீதி என மார்த்தட்டி வரும் நிலையில் தனி ஒருவருக்காக கோவிலை அடைத்து பக்தர்களை அனுமதிக்காமல் தனியாக யாகம் நடத்தியது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ