திமுக ஆட்சிக்கு வந்தாலே சூறையாடப்படும் கோவில்கள் … பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு ; எச்சரிக்கும் அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 3:40 pm

திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்று விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. வழக்கம் போல் அதிகாலை நேரத்தில் கோவில் அர்ச்சகர்கள் நடை திறந்த பொழுது கோவிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், கோவிலுக்குள் உள்ள இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருந்தது. மேலும் தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்தது.

முருகன் சன்னதியில் வெண்களத்தால் செய்த வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் உபகாரப்பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம் அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் ஒளிந்திருந்த சரவண பாரதி (32) என்ற நபரை கைது செய்தனர்.

இதையறிந்த இந்து அமைப்பினர் கோவில் முன்பு திரண்டனர். அப்போது, கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனிடையே, கைதான நபர் மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தரப்பில் கூறியதாக தெரிகிறது. போலீசாரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

இந்த நிலையில், மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும், கோவில்கள் இனி தாக்கப்பட்டால் நிகழும் எதிர்விளைவுகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை.

கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது. கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 433

    0

    0