தி.மலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்மில் கொள்ளை… 2016ல் நடந்த அதே சம்பவம் : போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!
Author: Babu Lakshmanan13 February 2023, 11:44 am
திருவண்ணாமலை அடுத்தடுத்து 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம்களில் புகை வருவதாக அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்வையிட்டதில், 4 ஏ.டி.எம் இயந்திரங்களிலும் கேஸ் வெல்டிங் மெஷினை பயன்படுத்தி, ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதிலும், கலசப்பாக்கம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து மட்டும் 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2016ம் ஆண்டு அடுத்தடுத்த வங்கிகளில் நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தை போன்று, மீண்டும் திருவண்ணாமலையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, கொள்ளை நடந்த ஏடிஎம் மையத்தில் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.ஏடிஎம் மையங்களில் இருந்த சிசிடிவி கேமிராக்களும் எரிந்து விட்டதால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இவ்வழக்கில் புதிய திருப்பமாக, கடந்த 3ம் தேதி பெங்களூரு மாநிலம் கே.ஜி.எஃப் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்திலும் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும், திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு கொள்ளை சம்பவங்களையும் நிகழ்த்தியிருப்பது ஒரே கும்பலாகத்தான் இருக்கும் என்றும், அரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில், 2 தனிப்படை போலீசார் அரியானா புறப்பட்டு சென்றுள்ளனர்.