காங்கிரசுடன் இணைகிறதா தமாகா…? புதிய தலைவருடன் நடந்த ரகசிய சந்திப்பால் திடுக்!

Author: Babu Lakshmanan
23 February 2024, 9:08 pm

பாஜக கூட்டணியில் சிறந்த நடுநிலையாளர் என்று வர்ணிக்கப்படும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது கட்சிக்கு தஞ்சை, தென்காசி, திருச்சி என மூன்று தொகுதிகளில் போட்டியிடும் ஆர்வத்தை தேசிய பாஜக தலைவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அதேநேரம் தனது தந்தை ஜிகே மூப்பனார் இருந்தபோது கட்சிக்காக பயன்படுத்திய சைக்கிள் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடர்ந்தார்.

இதன் மூலம் தனது கட்சியை 25 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல மக்களிடம் பிரபலப்படுத்தி விடவேண்டும் என்கிற நோக்கம் அவரிடம் இருப்பது பளிச்சென்று தெரிகிறது.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டு 1996, 2001தமிழக தேர்தலில் பெற்ற 18 சதவீத வாக்குகளை மீண்டும் மீட்டெடுத்தால்தான் கட்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திச் செல்ல முடியும் என்கிற எண்ணம் அவரிடமும், அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களிடமும் பரவலாகவே காணப்படுகிறது.

இதனால்தான் ஜி கே வாசன் முன்பை விட தற்போது தமிழக அரசியலில் தீவிரமும்,சுறுசுறுப்பும் காட்டி வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கட்சியுடன் தமாகவை இணைக்குமாறு பலமுறை அழைப்பு விடுத்தும் அதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.

எனினும் அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் மீண்டும் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதற்காக எப்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து சில முறை ஜி.கே. வாசன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினாரோ அதுபோல தமிழ் மாநில காங்கிரசை எப்படியும் காங்கிரசுடன் இணைத்து விடவேண்டும் என்பதற்காக
ஜி கே வாசனுடனும், அவரது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடனும் கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் தொடர்ந்து ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கான காரணம் வெளிப்படையாக தெரியும் ஒன்று. தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு திமுக தலைமை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் மிகுந்த கஞ்சத்தனம் காட்டி வருகிறது. அதேநேரம் தமிழ் மாநில காங்கிரஸ் தங்களுடன் இருந்தால் திமுக இதுபோல் கடுமை காட்டாது. உங்களுக்கு ஐந்தாறு சீட்டுகள்தான் தருவோம் என்று முரண்டும் பிடிக்காது என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உறுதியாக நம்புகிறார்.

ஏனென்றால் இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சென்னை கோட்டையில் அஜோய் குமார் தனிப்பட்ட முறையில் 10 நிமிடங்கள் சந்தித்து பேசி தமிழகத்தில் காங்கிரசுக்கு கடந்த முறை ஒதுக்கியது போல ஒன்பது தொகுதிகளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கொடுங்கள் என்று வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலினோ, நீங்கள் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசுங்கள் என்று தனக்கு சம்பந்தமே இல்லாதது போல நழுவிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் கடும் அப்செட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த நிலையில்தான் தமிழ் மாநில காங்கிரசை அதிர்ச்சி அடைய செய்வது போல் தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசும்போது “தமிழகத்தில் மக்களுடன் இணைந்து பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. வடசென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் களம் காண விரும்புகிறோம். தமிழகத்தில் எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சியினரும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம். இதை சில கட்சிகளும் ஏற்றுக் கொண்டும் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

இதை பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருக்கும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் போன்றவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் தனது கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதற்குப் பிடி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அதேநேரம் சைக்கிள் சின்னம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜி கே வாசனும் இதை அவ்வளவாக விரும்பவில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப் பெருந்தகை பதவி ஏற்றுக்கொள்ளும் விழா, பிப்ரவரி 21ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.

அப்போது பாராட்டு தெரிவித்து பேசிய தலைவர்களுக்கு நன்றி கூறிய செல்வப் பெருந்தகை, “தமிழகத்தில் காமராஜர் ஆட்சி எப்போது வரும் என்று நமது தொண்டர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்ற கனவு எங்களுக்கும் உண்டு. அதற்கு எல்லோரும் சேர்ந்து அஸ்திவாரம் போடுவோம். களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைந்தே தீரும்” என பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர்களாக பதவி வகித்தவர்களில் மூப்பனார் தவிர வேறு யாரும் இப்படி உணர்ச்சி பொங்க பேசியதில்லை என்பதால் செல்வப் பெருந்தகை மீது தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலருக்கு கூடுதல் மதிப்பும், மரியாதையும் வந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இளைஞரணியை சேர்ந்தவர்கள் அன்று இரவே செல்வப் பெருந்தகையின் வீட்டுக்கு ரகசியமாக சென்று, அவருக்கு
சால்வை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்து இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, “காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று மூப்பனார் போலவே உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற தலைவர்களுடன்தான் நாங்கள் இணைந்து செயல்பட விரும்புகிறோம். பாஜகவுடன் இணைந்து பயணிக்க எங்களுக்கு விருப்பமில்லை. பல மாநிலங்களில் அவர்களுடன் கூட்டணி சேர்ந்த சிறு சிறு கட்சிகள் காணாமல் போய்விட்டன. அவற்றை பாஜக விழுங்கிவிட்டது என்று கூட சொல்லலாம். 2020ல் எங்கள் தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக டெல்லி பாஜக மேலிடம் வாக்குறுதி அளித்தது.

ஆனால் அவர் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அமைச்சர் பதவியே தரவில்லை. பிரதமர் மோடிக்கு ஜி கே வாசன்
மீது தனி பற்று உண்டு என்பதால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க விருப்பம் தான். ஆனால் இடையில் இருந்த சிலர்தான் கிடைக்காமல் தடுத்து விட்டனர்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவை மீண்டும் அக் கூட்டணிக்குள் கொண்டு வர எங்கள் தலைவர் ஏன் தொடர்ந்து ஈடுபட்டார் என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இதனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டதுதான் மிச்சம்.

பிரதமர் மோடிக்காகத்தான் சமாதான தூதுவர் போல எங்கள் தலைவர் நடந்து கொண்டார் என்றாலும் கூட அதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. இது எங்கள் கட்சிக்கு தேவையற்ற ஒன்று.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் காங்கிரஸில் இணைந்து விடுகிறோம். தலைவர் ஜி கே வாசனையும் உங்கள் பக்கம் கொண்டு வந்து விடுகிறோம். அவரும் பாஜக மீது அதிருப்தியில் தான் இருக்கிறார்” என்று அப்போது அந்த தலைவர்கள் உறுதி கூறியதாகவும் தெரிகிறது.

இந்த தகவல் ஜி.கே.வாசனுக்கு தெரிய வந்ததும் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாக அமையும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற ஜி கே வாசனக்கும் அவ்வளவாக இஷ்டமில்லை என்கிறார்கள்.

அதேநேரம் அவர் பாஜக சின்னத்தில் போட்டியிட விரும்பவில்லை என்பதும் நிஜம். ஏனென்றால் அவரது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் கூட பாஜக எம்பிக்களாகவே நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்படுவார்கள் என்பதுதான்.

எனவேதான் வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 தமிழக தேர்தல் இரண்டையும் எதிர்கொள்வதற்காக சைக்கிள் சின்னத்தைக் கேட்டு அவர்
வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கட்சியின் சின்னத்தை மீட்டெடுப்பதன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் புதுப்பொலிவு பெற்றுவிடும் என்றும் ஜி.கே. வாசன் உறுதியாக நம்புகிறார்.

காங்கிரசுடன் தமாகா இணையுமா? என்று எழுந்துள்ள கேள்வி தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை ஜி கே வாசன் எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 235

    0

    0