ஒற்றை தலைமை நோக்கி நகரும் அதிமுக… தலைமை ஏற்க தயாராகும் இபிஎஸ்..? பெருகும் ஆதரவு…!!

Author: Babu Lakshmanan
15 June 2022, 1:59 pm

ஒற்றைத் தலைமை

அதிமுகவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்கிற எண்ணம் அக்கட்சியின் அனைத்து மட்டத்திலும் வெளிப்பட்டு வருகிறது.

ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக வலிமையாக செயல்பட வேண்டும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் அதை ஒற்றைத் தலைமையால் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் அதிமுகவின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் தற்போது ஆழமாக வேரூன்றி இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

மேலும் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், 2021 சட்டப் பேரவை தேர்தலில், 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான், ஆட்சியை தக்க வைக்கும் வாய்ப்பை அதிமுக இழந்தது.

தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ள இதே நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்து நீடித்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் குழப்ப நிலையிலேயே சந்திக்கும் சூழல் அதிமுகவுக்கு ஏற்படலாம். இது திமுகவுக்கு சாதகமான நிலையை மீண்டும் ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் அதிமுகவினரிடம் பரவலாக காணப்படுகிறது.

பொதுக்குழு கூட்டம்

இதனால்தான் அவ்வப்போது பேசப்பட்டு வந்த ஒற்றை தலைமை முழக்கம் இப்போது அதிமுகவில் மிக வலுவாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

வருகிற 23-ம் தேதி சென்னையில் அதிமுக மற்றும் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

Admk OPS EPS- Updatenews360

இதில் ஒற்றை தலைமை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய பெரும்பான்மையான அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தலைமையேற்று நடத்த வேண்டும், 23-ம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசியிருக்கிறார்கள்.

இபிஎஸ்-க்கு ஆதரவு

இது ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக உள்ள ஒரு சிலரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாலும் கூட அது கூட்டத்தில் அவ்வளவாக பிரதிபலிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.

அதேநேரம் கட்சியின் எதிர்கால நலன் கருதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது.

EPS - Updatenews360

இதுகுறித்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “கட்சியில் தொண்டர்களின் ஆதரவு முழுமையாக எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காக அவர் எடுக்கும் முடிவுகளை அனைத்து மட்டத்திலும் அதிமுகவினர் ஆதரிக்கின்றனர். சாதி, மத, இன பாகுபாடின்றி கட்சியை வழிநடத்தி செல்வதிலும் போராட்டங்களை நடத்துவதிலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

ஆனால் ஓபிஎஸ் அறிக்கை விடுவதில் மட்டுமே மிகுந்த கவனம் செலுத்துகிறார். அது கட்சியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பலனளிக்காது. எடப்பாடி பழனிசாமி போல களத்தில் இறங்கி வேலை பார்க்கும் ஒருவர்தான் கட்சிக்கு இப்போதைய தேவை. தனது இள வயது முதலே அதிமுகவை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் கொண்டவர். எனவே அவருடைய ஒற்றைத் தலைமையை ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வதுதான் கட்சிக்கு நல்லது. அப்போதுதான் ஜெயலலிதா கூறியதுபோல இன்னும் பல நூறு ஆண்டுகள் அதிமுக வலிமையோடு இருக்கும் என்ற சூளுரை உறுதிப்படுத்தப்படும்” என்று ஆதங்கப்பட்டனர்.

இரட்டை தலைமை இருப்பதால், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து எந்த தெளிவான முடிவையும் எடுக்க முடியாமல் அதிமுக தடுமாறுவதை பார்க்க முடிகிறது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவதே சிறப்பாக இருக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்காக பல காரணங்களையும் அவர்கள் அடுக்குகின்றனர்.

பின்னடைவு

“கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனல் பறக்கும் பிரச்சாரம் செய்த அதிமுகவின் ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் கூட அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

ஆனால் ஓபிஎஸ்சோ தனது தேனிமாவட்டம் தவிர வேறு எங்குமே பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. அதில் அவர் அவ்வளவாக ஆர்வமும் காட்டவில்லை.
அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த சுறுசுறுப்பு சிறிது கூட ஓபிஎஸ்சிடம் இல்லை. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதை ஓபிஎஸ்ஸால் மனதுக்குள் ஜீரணிக்க முடியவில்லை என்பதே இதற்கு உண்மையான காரணம்.

OPS - Updatenews360

தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம் செய்திருந்தால் அதிமுகவிற்கு இன்னும் 20 தொகுதிகள் வரை கூடுதலாக கிடைத்திருக்கும். திமுகவும் தனி மெஜாரிட்டி பெற்றிருக்காது.

மேலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சசிகலாவை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்த நிலைப்பாட்டில் ஓபிஎஸ் இன்றுவரை உறுதியாக இல்லை.

சசிகலாவுக்கு ஆதரவு

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்படும் போதெல்லாம், அதை மறுக்காமல் இது பற்றி கட்சி தீர்மானிக்கும் என்று அவ்வப்போது கூறி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

அவருடைய மனைவி இறந்த பின்பு சசிகலா, ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய பிறகு இது இன்னும் அதிகமாகி போனது. 2017-ல் சசிகலாவுக்கு எதிராக, ஜெயலலிதா சமாதி முன்பாக அமர்ந்து, தான் தர்மயுத்தம் நடத்தியதே அவருக்கு அடியோடு மறந்து போய்விட்டது.

இதனால்தான் தனது தம்பி ராஜா, சசிகலாவை திருச்செந்தூரில் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதை அவர் மனதார கண்டிக்கவில்லை. கட்சி வெளியிட்ட அறிக்கையில்தான் தனது எதிர்ப்பை அவர் பதிவு செய்திருந்தார்.

அதேபோல தனது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் கடந்த மாதம், சென்னை கோட்டையில் நடந்த மாநில வளர்ச்சி குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு முடிவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, தனது தொகுதி தொடர்பாக சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். அத்துடன் திமுக அரசுக்கு பாராட்டுப் பத்திரமும் வாசித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இதுபோல அதிமுகவில் ஒரு பிரமுகர் நடந்து கொண்டிருந்தால் அவருடைய நிலை என்னவாகியிருக்கும் என்று அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மனம் குமுறுகிறார்கள். ஆனாலும், இதில் பெரிதாக எந்த ரியாக்சனையும் ஓபிஎஸ் வெளிப்படுத்தவில்லை.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை தனக்கு கிடைத்த கேடயமாக அவர் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது இதுபோன்ற பல தருணங்களில் வெளிப்பட்டுள்ளது. அதுதான் அதிமுக தொண்டர்களிடம் அவர் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தவில்லை. அவருடைய இந்த ஊசலாட்ட நிலைதான் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு கட்சியில் வலுவாக அமைய இன்னொரு முக்கிய காரணமாகிவிட்டது.

கட்சிக்கு நல்லது

இன்று கட்சி எம்எல்ஏக்களில் 62 பேர், மாவட்டச் செயலாளர்களில் 90 சதவீதம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் 95 சதவீதம் பேரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அது ஓபிஎஸ்சுக்கும் நன்றாகவே புரிகிறது.

அதனால் கட்சியில் நடப்பதை, அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

eps ops - updatenews360

இதில் அமைதி காப்பதும், சசிகலாவை மறைமுகமாக ஆதரிப்பதும் எந்த வகையிலும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு உதவாது. அதனால் கட்சியில் தனக்குள்ள கௌரவத்தை தக்கவைத்துக் கொள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு, அதிமுகவின் வளர்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வதே அவருக்கு நல்லது” என்றும் அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இப்படி அதிமுக நிர்வாகிகளும், பல்வேறு மூத்த அரசியல் நோக்கர்களும் கூறுவது வருகிற 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுகூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை உறுதிப்படுத்தும் ஒன்றாகவே தென்படுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 723

    0

    0