முதலைக் கண்ணீர் வேண்டாம்.. CM ஸ்டாலின் அறிக்கையால் அண்ணாமலை சந்தேகம்… மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் எழுந்த கேள்வி!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 2:39 pm

மருத்துவ கல்லூரி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய மருத்துவ ஆணையமானது கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, இளநிலை மருத்துவக் படிப்புக்கான புதிய விதிமுறையானது மாநிலத்தில் உள்ள 10 லட்சம் மக்கள்தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், இந்த விதிகளை தாண்டி கூடுதலாக மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதனால் தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதில் இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தக் கடிதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் X தளத்தில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்தவர்கள் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். திமுக எம்பி டிஆர் பாலு கூட கருத்து தெரிவித்திருந்தார்.

தற்போது, திமுக 6வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரையில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளது. இதுதான் உங்களின் மரபு. தயவு செய்து முதலைக் கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள்.

தமிழகத்தில் சிறப்பான சுகாதாரக் கட்டமைப்பு இருப்பது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதில் திமுகவின் பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவு. அதிலும், குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலினின் பங்களிப்பு என்பது, திமுக அமைச்சர் எவ வேலுவின் தனியார் மருத்துவ கல்லூரியை திறந்து வைத்தது தான்.

தமிழக முதலமைச்சரின் இந்த மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை, மற்ற திமுக அமைச்சர்களும் புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசு தனது கடந்த கால பெருமைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 413

    0

    0