ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்து விடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுக மீது சீமான் கோபம்..!!!

Author: Babu Lakshmanan
16 August 2022, 8:41 pm

சென்னை : கல்வி தொலைக்காட்சியின் உயர்பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை பணியமர்த்துவதா? என்றும், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசுக்குச் சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் முதன்மைசெயல் அலுவலராக மணிகண்ட பூபதி எனும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரை நியமனம் செய்திருக்கும் திமுக அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் பேசக்கூடிய கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், அறிஞர்கள் எத்தனையோ பேர் இருக்க, அவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கல்விக்கே தொடர்பற்ற மதச்சார்பு கொண்ட ஒருவரை கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச்செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு, மூன்று ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போது புதிதாய் முதன்மைச்செயல் அலுவலர் எனும் பொறுப்பு உருவாக்கப்பட்டு, அதில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய தேவையென்ன வந்தது? ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரைக் கல்வித்துறையில் பணியமர்த்தினால், அவர் அதுதொடர்பான கருத்துருவாக்கத்தைத்தானே செய்வார்! அது கல்வியைக் காவிமயமாக்காதா? இதுதான் பாஜகவை எதிர்க்கிற இலட்சணமா?

ஏற்கனவே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைக் கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் புதிய கல்விக்கொள்கையைப் புகுத்தவும், கல்வியைக் காவிமயமாக்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அதனைத் தடுக்கத் துப்பற்ற திமுக அரசு, இப்பொழுது கல்வி தொலைக்காட்சியின் உயர் பொறுப்பிலும் அப்படி ஒருவரை அமர்த்தியிருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

‘நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக ஊடுருவி விடும்’, ‘திமுகவுக்கு வாக்குச்செலுத்தாவிட்டால் பாஜக ஊடுருவி விடும்’ என்றெல்லாம் பயமுறுத்தி, அதன்மூலம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த திமுக அரசு, இப்போது ஆர்.எஸ்.எஸ்.ஸையே அதிகார வர்க்கத்துக்குள் ஊடுருவ வழியேற்படுத்தி கொடுப்பதுதான் சமூக நீதி ஆட்சியா? வார்த்தைக்கு வார்த்தை, ‘திராவிட மாடல் அரசு’ என கூறும் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு வாசல் திறந்துவிடுவதுதான் திராவிட மாடல் அரசா? என்பதை விளக்க முன்வர வேண்டும்.

எனவே, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நம்பிக்கை நாற்றுகளான மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கல்வி தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலர் பதவி தொடர்பான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற்று, அறிவார்ந்த கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்து, கல்வி தொலைக்காட்சியை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 534

    0

    0