மீண்டும் கிளம்பிய தனியார்மய பூதம்… பாமக கொளுத்திப் போட்ட சரவெடி… அதிர்ச்சியில் அரசு பஸ் ஊழியர்கள்!!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 3:54 pm
Quick Share

போக்குவரத்துத்துறை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெருத்த நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அதை அவ்வப்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பதும் வாடிக்கையாக உள்ளது.

கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இதுபோன்றதொரு செய்தி ஊடகங்களில் வேகமாக பரவியபோது “தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

Bus Strike - Updatenews360

அதேபோல சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.
சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

பாமக

என்றபோதிலும் அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்பிரச்னை ஒரு மாதத்துக்கு பிறகு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

அவர் கூறும்போது,”சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார் மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும்.

உலக வங்கியுடன் தமிழக அரசு கடந்த 6.12.2021 அன்று கையெழுத்திட்ட,‘‘ சென்னை மாநகர கூட்டாண்மை: நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம்’’ என்ற தலைப்பிலான ஒப்பந்தத்தின் சில பிரிவுகள்தான் இதற்கு காரணமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி சென்னையில் போக்குவரத்து சேவை, நடைபாதை கட்டமைப்புகள், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு உலக வங்கி 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும். இத்திட்டத்தின் ஓர் அங்கமாக சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி 1000 பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்காது; மாறாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம்தான் புதிய பேருந்துகளை இயக்கும்.

இவற்றை தனியார் நிறுவனத்தின் ஓட்டுனர், நடத்துனர்கள்தான் இயக்குவர். அவற்றுக்கு மாதம் ஒரு தொகையை போக்குவரத்துக் கழகம் வாடகையாக செலுத்தும். இந்த முறைப்படி 2022-ம் ஆண்டில் 500 பேருந்துகளையும், 2024-ம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளையும் இயக்குவதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதை தமிழக அரசும் போக்குவரத்துத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒப்புக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் முயற்சியே தவிர வேறு இல்லை” என கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

திமுக மீது விமர்சனம்

டாக்டர் ராமதாஸ் இப்படி கூறி இருப்பதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான அரசு போக்குவரத்து கழகம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மொத்தத்தில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை அது நஷ்டத்திலும் உள்ளது.

CM Staling Against - Updatenews360

இதிலிருந்து மீளவே அரசு பேருந்து போக்குவரத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவுக்கு, திமுக அரசு வந்திருப்பதாகவும் இன்னும் சில ஆண்டுகளில் மாநிலம் முழுவதும், 25 சதவீத அரசு பஸ் போக்குவரத்து தனியார் மயமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 50 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான், தனியார் பேருந்துகளை அரசுடைமை ஆக்கியது. தற்போது அவருடைய மகன் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தனியார் மய பாதையில் பின்னோக்கி செல்கிறது, என்ற கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தனியார் மயம்

1970க்கு முன்பு ஒரு சில குறிப்பிட்ட தனியார் பேருந்து நிறுவனங்கள் மட்டும் மாநிலம் முழுவதும் தொலை தூர பேருந்துகளை இயக்கி, கொள்ளை லாபம் சம்பாதித்ததை கருத்தில் கொண்டு அதில் ஓரளவு லாபத்தை தமிழக அரசுக்குத் திருப்பும் முயற்சியாகவும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடனும் தனியார் பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக இப்படி பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டன. கருணாநிதி இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, 1971 ஜூன் 18-ல் பேருந்துகள் உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு உரிமையாளர் 15 பேருந்துகளுக்கு மேல் வைத்துக்கொள்ள முடியாது என்ற சூழலையும் அப்போதைய திமுக அரசு உருவாக்கியது.

இந்த நிலையில்தான் தற்போது அரசு பேருந்துகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளில் திமுக அரசு மீண்டும் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Triupur Bus Strike - Updatenews360

பஸ் போக்குவரத்தை தனியார் மயமாக்கும்போது, அரசுக்கான மூலதன முதலீட்டு செலவு குறையும். டிரைவர், நடத்துனர் சம்பளம், வாகன பராமரிப்பு செலவுகள் அறவே இருக்காது. பஸ்களை இயக்குவது தனியார் என்றாலும், ஓட்டுனர் நடத்துனர் நியமனத்தை அரசே மேற்கொள்ளும். மேலும் போக்குவரத்து துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையும் தீர்ந்து விடும்” என்று இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனால்தான் இதில் திமுக அரசு தொடர்ந்து தீவிர ஆர்வம் காட்டி வருகிறது என்கிறார்கள்.

அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுவதால், பொது மக்களுக்கு சில நன்மைகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அரசு பஸ் போக்குவரத்து சேவையை விட, தனியார் பஸ் சேவை சிறப்பாக இருக்கும். சரியான நேரத்துக்கு பஸ்கள் வந்து செல்லும். சுத்தம், சுகாதாரத்துடன் பஸ்கள் பராமரிக்கப்படும் என்றும் நம்பலாம்.

எதிர்ப்பு

அதேநேரம் 60க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை இந்த முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. அவற்றின் பிரதிநிதிகள் சிலர் வைக்கும் வாதமோ வேறு மாதிரியாக உள்ளது.

“மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் கூட அவற்றில் 5 ஆயிரம் பஸ்கள், பல்வேறு காரணங்களால் இயக்கப்படுவதில்லை என்பதே உண்மை. பல வழித்தடங்களில் போதிய வருவாய் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம். அத்துடன் மகளிர், போலீசார், மாணவர்களுக்கு இலவசம் உள்ளிட்ட கட்டணமில்லா சலுகைகளால், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, போக்குவரத்து கழகங்களுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்தினாலே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம் வெகுவாக குறைந்துவிடும்.

சேவை அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதற்காகவே, போக்குவரத்து கழகங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழகத்தில் தனியார் பஸ்கள் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதில் தனியாரை அனுமதித்தால், சேவை துறையில் இருந்து மாறி, லாபத்துக்காக நடத்தப்படும் வியாபார நிறுவனம் போலாகி விடும்.

மேலும் அரசு பஸ் ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து விரைவில் நல்லதொரு தீர்வு காணப்படும் என்று கடந்த மாதம் அமைச்சர் சிவசங்கர் எங்களுக்கு உறுதியளித்திருந்தார்.

அதுவும் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட்ட பிறகுதான் அமைச்சர் எங்களை அழைத்து பேசினார். ஆனால் கடந்த வாரம் நடந்த 6-வது கட்டப் பேச்சு வார்த்தையிலும் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.

அதை ஏற்றுக்கொண்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்தினரில்
பெரும்பான்மையானோர் திமுக கூட்டணிக்கே வாக்களித்தனர். திமுகவும் ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஊதிய உயர்வு குறித்து இதுவரை எதுவும் அறிவிக்காமல் திமுக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை எங்களுக்கு புரியாமல் இருந்தது. படிப்படியாக அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க திமுக அரசு, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தையும் அதனால்தான் ஊதிய உயர்வு வழங்காமல் பேச்சுவார்த்தையை நீட்டித்துக் கொண்டே போகிறார்களோ என்பதையும் இப்போது எங்களால் உணர முடிகிறது.

உலக வங்கியிடம் பழைய 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்குவது குறித்த முடிவு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலின்றி நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இனியும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பஸ்கள் தனியார் மயம் ஆகாது என்று கூறினாலும் அதன் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுவது கடினம். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின்தான் இதுதொடர்பான உத்தரவாதத்தை எங்களுக்கு வெளிப்படையாக அளிக்க வேண்டும். அப்போதுதான் இதை முழுமையாக நம்புவோம்.

தவிர, ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் தனியார் நிறுவன அதிபர்களை கடுமையாக எதிர்க்கும் திமுக அரசு இதில் மட்டும் ஏன் பின்வாங்குகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. திமுக அரசின் பதவிகாலம் இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கிறோம் என்ற பெயரில் அரசு பேருந்துகள் அனைத்தையும் தனியார் மயமாக்கி விடுவார்களோ? என்ற அச்சமும் எங்களுக்கு வருகிறது. இதனால் எங்களது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பது நிச்சயம். ஏனென்றால் அரசு பஸ்கள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்கு போனால் அவர்கள் முதலில் சம்பள குறைப்பிலும், ஊழியர்களை வேலையில் இருந்து தூக்குவதிலும்தான் கை வைப்பார்கள். அதனால் அரசு பஸ் ஊழியர்களது குடும்பங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படும் நிலையும் உருவாகும்”என்று அந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தனியார்மயம் நல்லதா?

அதேநேரம் சமூக நல ஆர்வலர்களோ அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படுவதை வரவேற்கின்றனர்.

“அரசு பஸ்கள் மக்களின் சேவைக்காக இயக்கப்படுவதாக கூறப்பட்டாலும் கூட, போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் முழு அர்ப்பணிப்புடன் வேலை பார்ப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கிராமப் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படுவது இல்லை என்கிறார்கள். ஆனால் தனியார் பஸ்கள் அந்த நேரத்தில் தொலைதூர கிராமங்களுக்கு இயக்கப்பட்டு நல்ல லாபமும் சம்பாதிக்கின்றன. இப்படி இருந்தால் அரசு பஸ்களுக்கு எப்படி நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்?

தவிர அரசு பஸ்களுக்கு டயர்கள் உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களை வாங்குவதில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் பெருத்த நஷ்டத்திற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

Diwali Spl Bus-Updatenews360

அதேநேரம் திமுக அரசு, சாதாரண டவுன் பஸ்களில் அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணத்தை அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. நலிந்த, ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டுமே இலவச பயணம் என்று அறிவித்திருந்தால் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்படுவதை தமிழக அரசால் தடுக்க முடியும்.

இப்படிப் பல்வேறு காரணங்களை அலசி ஆராயும் போது, மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் தனியார் மயம் ஆவது நல்லதே என்று நினைக்கத் தோன்றுகிறது” என அந்த சமூக நல ஆர்வலர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 762

    0

    0