தமிழ்நாடு VS தமிழகம்… வெற்றி யாருக்கு..? ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான திடீர் அறிவிப்பு ;!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 1:10 pm

தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காசி தமிழ் சங்க விழாவில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே பொருத்தமாக இருப்பதாக பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தனர்.

TN Governor RN Ravi -Updatenews360

அதுமட்டுமில்லாமல், சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய ஆளுநரை முற்றுகையிட்டு கோஷங்களையும் எழுப்பினர். இதனால், தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஆளுநர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் குடியரசு தலைவரிடம் முறையிடப்பட்டது. அவரும் இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:- 2023 ஜனவரி 4ஆம்‌ தேதி அன்று ஆளுநர்‌ மாளிகையில்‌, சமீபத்தில்‌ நிறைவடைந்த “காசிடன்‌ தமிழ்‌ மக்களின்‌ பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்‌’ ஒரு மாத காசி – தமிழ்‌ சங்கமம்‌ விழாவில்‌ பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப்‌ பாராட்டும்‌ நிகழ்ச்‌சி நடைபெற்றது.

அந்நிகழ்வில்‌ வரலாற்றுப்‌ பண்பாடு பற்றிப்‌ பேசும்‌ போது, காசி மற்றும்‌ தமிழ்நாட்டுக்கும்‌ இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்‌’ என்ற வார்த்தையைப்‌ பயன்படுத்தினேன்‌. அந்தக்‌ காலத்‌தில் ‘தமிழ்நாடு’ என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப்‌ பண்பாட்டுச்‌ சூழலில்‌, ‘தமிழகம்‌’ என்பதை ‘மிகவும்‌ பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில்‌ குறிப்பிட்டேன்‌.

எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின்‌ பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள்‌ கொள்வதோ, அனுமானம்‌ செய்து கொள்வதோ தவறானது மற்றும்‌ யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

எனது பேச்சின்‌ அடிப்படை புரியாமல்‌, ஆளுநர்‌ தமிழ்நாட்டின்‌ பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை: எனும்‌ வாதங்கள்‌, விவாதப்பொருளாக இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழ்நாடு தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!