இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியாது : கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்… மனம் உருகிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
7 May 2022, 5:53 pm

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி காலம் குறித்து கண்கலங்கி அமைச்சர் துரைமுருகன் பேசியது, சட்டப்பேரவையில் இருந்தவர்களை மனம் உருகச் செய்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் சட்டப்பேரவையில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், ஓராண்டு ஆட்சி குறித்து அவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினர்.

இதன் ஒரு பகுதியாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது :- எனக்கு ஒரே ஒரு ஆசை. இந்த திராவிட இயக்கம் இருக்க வேண்டும். ஆட்சி போகும் வரும். ஆனால், என்றென்றும் திராவிடம் இருக்க வேண்டும். அதுக்காகத்தான் திராவிட மாடல் என பெயர் வைத்துள்ளீர்கள்.

என்னுடைய ஆசை, திராவிடம் என்னும் இனப்பற்று இருக்க வேண்டும் என்பதுதான். அதனை காப்பாற்ற ஆண் மகன் நீங்கள் பிறந்துள்ளீர்கள், எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, பேசிய அவர், ‘இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று சொல்ல முடியாது’, என்று கூறி கண்கலங்கினார்.

அப்போது, இடைமறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “அதெல்லாம், 100 ஆண்டு காலம் நோய்நொடி இல்லாம நல்லா இருப்பீங்க… எல்லோருடைய ஆசிர்வாதமும் உங்களுக்கு உண்டு,” என்று கூறினார்.

இதனைக் கேட்டு விட்டு மீண்டும் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஆனால், என் தம்பிக்கு நான் சொல்கிறேன், என் வாழ்நாளும் சேர்த்து நீ வாழ வேண்டும்,” எனப் பேசினார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த உருக்கமான பேச்சு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அவையில் இருந்த அனைவரின் உள்ளங்களையும் கலங்கச் செய்தது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?