சென்னை : போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், திடீரென பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக தனது ஓராண்டு ஆட்சி நிறைவை நெருங்கி வருகிறது. இந்த ஓராண்டுக்குள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஊழல், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஆவின் ஸ்வீட்ஸ் வாங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சந்தித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது பிஜிஆர் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தற்போது வரை குற்றம்சாட்டி வருகிறார். இது திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழலில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து கொண்டே வந்தன. அண்மையில், சேலத்தில் நடந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அதன் நிர்வாகிகள் தமிழக அரசு மீது வெளிப்படையான குற்றச்சாட்டுக்களையும், புகார்களையும் முன்வைத்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகவும், ஒரு குண்டூசியை நகர்த்தி வைப்பதற்குக் கூட பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் நிலைமைக்கு மோட்டார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவருமான முருகன் வெங்கடாஜலம் குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகப்போவதாகவும், வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் மட்டும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாகக் கூறிய அவர், தேர்தல் சமயத்தில் எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதையும் சுட்டிக் காட்டி பேசினார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், போக்குவரத்துத்துறை ஊழியர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பாகுபாடு காட்டுவதாக, பிடிஓ ஒருவர் வேதனை தெரிவித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த தங்களை சாதியைச் சொல்லி சொல்லியே பேசுவதாகவும், நாய் போல தங்களை நடத்துவதாகவும் கூறியிருந்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவதற்குள் போக்குவரத்துத்துறையின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வருவது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால், வெளியாகிய அடுக்கடுக்கான புகார்கள் உண்மையாகி விடும் என்ற எண்ணமும் அவரிடத்தில் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், ஏற்கனவே கொடுத்த உறுதியின் பேரில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதால், அவரை துறை மாற்றம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டார் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்பதை ஸ்டாலின் உணர்த்தியிருந்தாலும், பதவியேற்ற ஓராண்டுக்குள் திமுக அரசின் மீது கரை ஏற்பட்டிருப்பதை யாராலும் அழிக்க முடியாது என்பதே உண்மை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..
அதேவேளையில், அண்மையில் அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்திற்கு கூடுதல் பேருந்து சேவையை அறிமுகப்படுத்திய போது, அரசுப் பேருந்தை அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஓட்டி அசத்தினார். இந்த நிலையில், தற்போது, போக்குவரத்து துறைக்கே அமைச்சராகியிருப்பது அவருக்கு அடித்த அதிர்ஷ்டமாக அவரது ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.