விரிவடையும் போராட்டம்… போக்குவரத்து ஊழியர்களுடன் கைகோர்த்த மின்வாரிய ஊழியர்கள்.. சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் ; தமிழக அரசுக்கு நெருக்கடி..!!
Author: Babu Lakshmanan10 January 2024, 8:51 am
2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. மறுநாளே அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்தடுத்து நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அறிவித்தபடி நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தன் ஊழியர்கள் மற்றும் மாற்று ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும், 100 சதவீத பேருந்துகளை இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதனிடையே, 2வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வரும் நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தை இன்று முற்றுகையிட இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையொட்டி, இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை – அண்ணா மின்வாரிய தொழிலாளர்கள் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.