மீண்டும் ‘ஷாக்’ தரும் மின் வாரியம்..! கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் பிளான்…? ஜூலை முதல் கட்டணம் உயர்கிறதா?…
Author: Babu Lakshmanan5 ஜூன் 2023, 7:39 மணி
கோடை வெயிலின் தாக்கம் இன்னும் இரண்டு வாரங்கள் நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் தமிழக மின்வாரியம் மின் நுகர்வோருக்கு மீண்டும் ‘ஷாக்’ அடிக்கும் ஒரு தகவலை வெளியிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணைத்தை உயர்த்த முடிவெடுத்து, அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது.
அதை ஏற்றுக்கொண்டு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மின்வாரியத்திற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக மின்வாரியம் 53 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி மக்களை கதிகலங்க வைத்தது.
மின் கட்டணத்தை உயர்த்த அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தன. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் மின் கட்டணம் குறைவு. தவிர கடந்த 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படாததால், இப்போது கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மின் வாரியம் தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.
அப்போது வீடுகளுக்கு 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு 4 ரூபாய் 50 காசுகள், 401 முதல் 500 வரை யூனிட்டிற்கு 6 ரூபாய். 501 முதல் 600 வரை யூனிட்டிற்கு 8 ரூபாய், 601 முதல் 800 வரை யூனிட்டிற்கு 9 ரூபாய், 801 முதல்1,000 வரை யூனிட்டிற்கு 10 ரூபாய் 1,001ற்கு மேல் யூனிட்டிற்கு 11 ரூபாய் என்று கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.
இத்தனைக்கும் அந்த நேரத்தில் தினமும் நான்கு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. அதனால் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலையில் இது என்ன புதிய தலைவலி என்று மின் நுகர்வோர் தங்களை நொந்து கொள்ளத்தான் முடிந்தது.
குறிப்பாக வாடகை வீடுகளில் வசிப்போர் இந்த மின் கட்டண உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏனென்றால் ஏற்கனவே 150 சதவீத சொத்து வரி உயர்வு காரணமாக
பெரும்பாலான வீடுகளின் உரிமையாளர்கள் அதை தங்களது வீடுகளில் வசிப்போர் தலையில்தான் கட்டி விட்டிருந்தனர்.
அந்த சுமையிலிருந்து விடுபடுவதற்குள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சுமந்து கொள்ளுங்கள், கஷ்டங்கள் பழகிப் போய்விடும் என்று கூறுவதைப் போல தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி,
வரும் ஜூலை 1ம் தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் 4.7 சதவீதம் வரை உயர இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தின் நுகர்வோர் விலைக்குறியீடு, அதாவது பணவீக்கத்தின் அளவு அல்லது 6 சதவீதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிபந்தனையும் விதித்திருந்ததுதான்.
தற்போது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த பண வீக்கமான 4.7 சதவீதத்தின் அடிப்படையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டில் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2026 – 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படிதான் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் மின்கட்டணம் மீண்டும் உயர்த்தப்படலாம் என்றும் இது பற்றிய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டண உயர்வுக்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், “ஏற்கனவே மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல், விசைத்தறி உரிமையாளர்களும் மின்கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர்.
இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டணம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டால், வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவரும் மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள். தமிழகத்தில் 90 சதவீத மக்களின் வருமானம் ஆண்டுக்கு 2 சதவீதம் கூட உயருவதில்லை. அப்படிப்பட்ட மக்களால் 4.7 சதவீதம் மின்கட்டண உயர்வை சமாளிக்க முடியாது.
தமிழக வரலாற்றில் 10 மாதங்களில் இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை, அவற்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவற்றால் தமிழக மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், இன்னொரு சுமையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, மின்சாரக் கட்டணத்தை ஜூலை மாதம் முதல் உயர்த்தும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, 2026-2027ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணையை செயல்படுத்துவதில் இருந்தும் விலக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
“4.7 சதவீத மின் கட்டண உயர்வு என்பது மிகக் குறைவாக இருப்பது போல தென்பட்டாலும் கூட ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துபவர்கள் 47 ரூபாய் அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். 2026-2027 வரை இதே சதவீத அளவிற்கு ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோர் கூட அடுத்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 150 முதல் 200 ரூபாய் வரை கூடுதலாக கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அதுவும் கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால் மின் அளவீட்டின் சிலாப் மாற்றம் அடைந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 500 ரூபாய் கூடுதலாக செலுத்தும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள். இதேபோல் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர் 700 முதல் 800 ரூபாய் வரை கூடுதலாக கட்ட வேண்டிய நெருக்கடியான நிலையும் ஏற்படலாம்” என்று சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“இது இன்னொரு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. ஜெயலலிதா தலைமையிலான முந்தைய அதிமுக அரசு,100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக அறிவித்தது. அதன் மூலம் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக திமுக அரசு கருத வாய்ப்பு உள்ளது. அதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதற்காகவே, ஆண்டுதோறும் அதிகபட்சம் 6 சதவீத மின் கட்டண உயர்வு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து இருப்பது போலவே தோன்றுகிறது.
மேலும் 3 மாத கால கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை குறைந்தபட்சம் 19 ஆயிரம் மெகாவாட் ஆகும். இது அடுத்த சில ஆண்டுகளில் 22 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கக்கூடும். கடந்த இரண்டரை மாதங்களில் கோடை வெயில் கொளுத்தியதால் மின் நுகர்வு அதிகமாக இருந்தது. இதனால்தான் தலைநகர் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நான்கு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்ததையும் காண முடிந்தது.
அதேநேரம், மின் கட்டணம் அதிகரிக்கப்படும்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய விழிப்புணர்வு நிலை மக்களிடம் தானாகவே உருவாகி விடும் என்று திமுக அரசு கருதுகிறதோ என்னவோ தெரியவில்லை. பெருகும் மக்கள் தொகை, கட்டப்படும் வீடுகள், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டால் தங்கு தடையின்றி
24 மணி நேரமும் தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கும் நிலையை ஏற்படுத்திவிட முடியும்.
தவிர டாஸ்மாக் மது விற்பனையில் அதிக கவனம் செலுத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி, தான் வைத்திருக்கும் இன்னொரு முக்கிய இலாகாவான மின் துறையிலும் அதிக அக்கறை காட்டவேண்டும்.
குறிப்பாக மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவேண்டும்” என்று அந்த சமூக ஆர்வலர்கள்
ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
0
1