தங்கம் ரேஞ்சுக்கு கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை… இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்வு..!!
Author: Babu Lakshmanan8 July 2023, 8:26 am
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இந்த விலை உயர்வு விற்பனையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு தலை சுற்றவே வைத்துள்ளது. விலை உயர்வை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது தமிழக அரசு.
வரத்து குறைவால் விலை உயர்ந்த தக்காளியின் விலை, நேற்று வரத்து அதிகரிப்பினால் 30 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இதனால், ஒரு கிலோ தக்காளி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கனிசமாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ.30 அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று குறைந்து காணப்பட்டு வந்த தக்காளி விலை, இன்று ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.