விடியல் ஆட்சியிலும் தொடரும் சோகம்! திமுக அரசு மீது இயக்குநர் பா.ரஞ்சித் திடீர் பாய்ச்சல்!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2022, 12:24 pm

சென்னை நகரில் நீர் நிலைகளை ஒட்டிய இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை யினருடன் இணைந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை கொளத்தூர் அவ்வை நகர் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150 வீடுகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.

Image

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ஆவடி எம்ஜிஆர் நகர் பகுதியில் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 60க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தள்ளப்பட்டன.

190 வீடுகளை அகற்றிய மாநகராட்சி

இதேபோல கடந்த மாதம் முதல் வாரம் சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 190 வீடுகளை போலீஸாரை பெருமளவில் குவித்து மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

30, 40 கி.மீ தொலைவில் மாற்று வீடுகள்

இந்தப் பகுதிகளில் வசித்தவர்கள் எல்லாம், 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த வறுமையில் உழலும், விளிம்புநிலை மக்கள் என்பதால் வீடுகளை இழந்தவர்கள் அடைந்த துயரம் சொல்லி மாளாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டாலும் கூட அவை சென்னை நகரக்கு வெளியே 30, 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அது அவர்களின் அன்றாட பயண, வேலைப்பளுவை பல மடங்கு அதிகரிப்பதாகவே அமைந்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Image

இந்த நிலையில்தான் கடந்த வாரம், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக கூறி அங்குள்ள இளங்கோ தெருவில் 350க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் அப்போது சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு அகதிகளாக செல்வோம் என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.

தீக்குளித்து தற்கொலை செய்த முதியவர்

இத்தனைக்கும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் இணைப்பு மற்றும் ரேசன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

Image

நேற்றும் காலையில் வீடுகளை இடித்து அகற்றும் பணி, தீவிரமாக நடந்தது. அப்போது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 55 வயது கண்ணையா என்பவர் திடீரென தீக்குளித்தார். மேலும் அவர், “காப்பாத்து, இந்த ஊமை ஜனங்களைக் காப்பாத்து!…” என்று ஆவேசத்துடன் முழங்கியதால் வீடுகளை இடித்து அகற்றும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது.

குவியும் கண்டனம்

பலத்த தீக்காயமடைந்த கண்ணையா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதியவர் ஒருவர் திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கொந்தளித்து இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசுக்கு எதிராக கொந்தளித்த ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, “சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல பத்தாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல். அதை அனுமதிக்க முடியாது. கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை இனியாவது அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார். 

Stalin, Ramadoss demand sacking of AIADMK (Amma) govt - Tamil Nadu News,  Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power  Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai

திமுகவையும், திமுக அரசையும் எப்போதுமே புகழ்ந்து பாராட்டிப் பேசும் இயக்குனர் பா. ரஞ்சித் கூட வீடுகளை இடித்து அகற்றியதற்காக முதல் முறையாக ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசுக்க இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்

அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் “விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும்தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே?” என்று உணர்ச்சி பொங்க கொந்தளித்து உள்ளார்.

Image

அத்துடன் இதுதொடர்பாக ஒருவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவையும், அவர் தனது பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார். அதில், “சென்னை மயிலாப்பூர் R A புரம் கோவிந்தசாமி நகரில் தமிழக அரசு ஆக்கிரமிப்பு என்றுகூறி வீடுகள் அகற்றுவதை எதிர்த்து கண்ணையா என்பவர் தீக்குளிப்பு. விடியல் ஆட்சியில் தொடரும் எம்மக்களின் விடியாத துயரங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இருவருமே திமுகவின் ஆட்சி பற்றி கோபத்துடன் கேள்வி எழுப்பியிருப்பது, திமுகவினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1300

    0

    0