மதிமுகவுக்கு மங்கிய திருச்சி வெற்றி வாய்ப்பு…? தட்டித் தூக்க அதிமுக, அமமுக போட்டா போட்டி…!
Author: Babu Lakshmanan30 மார்ச் 2024, 7:32 மணி
திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெற்றி பெறுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இத்தனைக்கும் 2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஐந்தரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த முறையும் அவர் திருச்சியை காங்கிரஸுக்கு ஒதுக்கும்படி டெல்லி மேலிடம் மூலம் திமுக தலைமைக்கு அழுத்தமும் கொடுத்தார். ஆனாலும் இத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க திமுக மறுத்ததோடு கடைசியில் வைகோவின் மதிமுகவுக்கு ஒதுக்கிவிட்டது.
2021ம் ஆண்டு நடந்த தமிழக தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது.
இதில் கந்தர்வகோட்டை தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றார். மற்ற ஐந்து தொகுதிகளும் திமுக வசமானது. அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாகை சூடியது. அப்படி இருக்கும்போது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியை மதிமுகவுக்கு எதற்காக கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் திமுகவில் பலமாக ஒலித்தது.
ஆனால் வைகோ மீது வைத்திருக்கும் மதிப்பு, மரியாதையின் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கி விட்டார்.
என்றபோதிலும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின் தொடக்கம் முதலே இரு கட்சிகளுக்கும் லடாய் ஏற்பட்டதை பார்க்க முடிந்தது. இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் மதிமுக கேட்டது. கட்சியின் அங்கீகாரம் மற்றும் தேர்தல் சின்னமான பம்பரத்தை மீட்டெடுக்கும் விதமாக வைகோ திமுகவிடம் இப்படி முரண்டு பிடித்தார். ஆனால் திமுகவோ உங்களுக்கு ஒரு தொகுதிதான் என்று உறுதியாக கூறி மதிமுக விரும்பி கேட்ட திருச்சி தொகுதியை மட்டும் கொடுத்தது.
அப்போதும் கூட எங்களது கட்சியின் சின்னமான பம்பரத்தில்தான் நிற்போம். திமுக சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று வைகோவின் மகன் துரை வைகோ அடம் பிடித்தார். தலைமை தேர்தல் ஆணையத்திடமும் பம்பரம் சின்னத்தை ஒதுக்கும்படி கோரிக்கையும் விடுத்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ அதற்கு மறுத்துவிட்டது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னத்தை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்க முடியும். ஒரு தொகுதிக்காக அது சாத்தியமில்லை என்று கையை விரித்து விட்டது.
இதற்கிடையே கடந்த 24ம் தேதி திருச்சியில் திமுக சார்பில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி உறுதி. உங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. எதற்காக நீங்கள் தயக்கம் காட்டுகிறீர்கள் என்பதும் புரியவில்லை என்று துரை வைகோ முன்பாகவே பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைக் கேட்டதும் அவர் கொதித்துப் போனார். திருச்சி தொகுதியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்த அமைச்சர் கேஎன் நேரு மற்றும் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் “எனக்கு விருப்பம் இல்லாமல் கட்சிக்காக மட்டுமே தேர்தலில் நிற்கிறேன்; அப்பா 30 வருடம் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துபோய் விட்டார். அவர் ஒரு சகாப்தம். செத்தாலும் எங்களுக்கு தனி சின்னம்தான், நான் சுயமரியாதைக்காரன். வேறு எந்த சின்னத்திலும் போட்டியிட மாட்டோம்” என்று ஆவேசமாக முழங்கினார்.
திருச்சி மாவட்ட திமுகவை 35 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கே என் நேரு முன்பாகவே துரை வைகோ இப்படி பேசியதை திமுகவினர் யாரும் ரசிக்கவில்லை. அமைச்சர் நேரு மனது வைத்தால்தான் திருச்சி தொகுதியில் வெற்றி பெறவே முடியும் என்ற நிலை இருக்கும்போது வைகோ மகனின் இந்த பேச்சு திமுக மீது அணுகுண்டு வீசியது போலவே இருந்தது.
இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டதை அறிந்த துரை வைகோ பின்னர் அமைச்சர் கே என் நேருவை தனிப்பட்ட முறையில் சந்தித்து,
தான் பேசியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அத்துடன் திருச்சி தொகுதியில் வெற்றி பெறுவதற்கு தங்களது முழு ஒத்துழைப்பும் வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார். இதில் கே என் நேரு சமாதானம் அடைந்தாரா?… இல்லையா? என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.
ஆனால் அவருடைய தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் துரை வைகோ மீதான கோபம் இன்னும் தணிந்ததாக தெரியவில்லை.இது அவருக்கு தேர்தலில் பாதகமான நிலையைத்தான் ஏற்படுத்தும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அதேநேரம் தற்போது திமுக சின்னத்தில் போட்டியிட முடியாமலும், பம்பரம் சின்னம் கிடைக்காமலும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில்தான் திருச்சியில் போட்டியிட வேண்டிய கட்டாயம் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுகவுடன் இப்படி முட்டல் மோதல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து அரசியல் பார்வையாளர் கூறுவது இதுதான்.
“திருச்சி தொகுதியில் தனது மகன் அருணை நிறுத்துவதற்குத்தான் அமைச்சர் கே என் நேரு விரும்பினார். இதற்காகத்தான் திருநாவுக்கரசர் எம்பிக்கு மீண்டும் திருச்சி தொகுதியை ஒதுக்கி விடக்கூடாது என்ற முட்டுக்கட்டையும் போடப்பட்டது. அதேநேரம் மதிமுகவோ விருதுநகர் தொகுதியில்தான் போட்டியிட முதலில் விருப்பம் தெரிவித்தது. ஆனால் அந்த தொகுதியை மாணிக்கம் தாகூர் எம்பி ராகுல் காந்தி மூலம் முன்கூட்டியே புக்கிங் செய்து விட்டார். இதனால்தான் வேறு வழியின்றி திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கவேண்டிய நெருக்கடி திமுக தலைமைக்கு ஏற்பட்டது.
இது, தன் மகனை திருச்சியில் போட்டியிட வைக்கலாம் என்று நினைத்த அமைச்சர் கே என் நேருவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. திருச்சியில் நின்றால் மகனுக்கு அமோக வெற்றியை பெற்று தந்து விட முடியும் என்று மனக்கோட்டை கட்டி இருந்த அவரால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார்கள்.
இப்போது அருண் நேரு பக்கத்து தொகுதியான பெரம்பலூரில் களம் இறக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கடும் சவாலை அளிப்பார் என்பது நிச்சயம். அதனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் பெரம்பலூருக்கு உட்பட்ட லால்குடி, குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருச்சி தொகுதியில் துரை வைகோவிற்கு குறைந்த அளவிலேயே திமுகவினர் தேர்தல் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஒத்துழைப்பும் சரி வர கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
ஏனென்றால் காங்கிரஸ் விரும்பிக் கேட்ட தொகுதிகளில் திருச்சியும் ஒன்று. அங்கு திருநாவுக்கரசர் எம்பிக்கு ஆதரவாளர்களும் அதிகம் தவிர திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அவருடைய பூர்வீக மாவட்டமான புதுக்கோட்டையின் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளும் வருகிறது. எனவே விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினரையே தேர்தல் பிரச்சாரத்திற்கு துரை வைகோ முழுமையாக நம்பியிருக்க வேண்டி உள்ளது.
திருச்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டு பேசிய அதே நாளில்தான் ஈரோடு மதிமுக எம்பி கணேச மூர்த்தி தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற மன வேதனையில் விஷ மாத்திரை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட துயர நிகழ்வும் நடந்தது. அடுத்த இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி கணேச மூர்த்தி மரணமடைந்து விட அது திமுகவை மட்டும் அல்லாமல் கூட்டணி கட்சிகளையும் திடுக்கிட வைத்தது.
இதனால்தான் திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் மதிமுகவுக்கு ஆதரவாக ஒருமித்த மனதுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது, அதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிடும் கருப்பையாவுக்கும், அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கும் சாதகமான அம்சமாக மாறி உள்ளது. இவர்கள் இருவரில் யாராவது ஒருவர்தான் வெற்றி பெறுவார்கள் என்று திருச்சி தொகுதி மக்களால் பரவலாக பேசவும் படுகிறது.
இதையறிந்து அதிர்ச்சி அடைந்த துரை வைகோ அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி சிவா எம்பி, இனிகோ இருதயராஜ் எம் எல் ஏ மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் நான் செய்தது மிகப் பெரிய தவறுதான் என்னை மன்னித்து எப்படியாவது வெற்றி பெற வைத்து விடுங்கள் என்று சரணாகதி அடைந்து விட்டதாக தெரிகிறது” என அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
துரை வைகோ போட்டியிடும் முதல் தேர்தலே இதுதான். அதுவே அவருக்கு ஒரு அக்னி பரீட்சையாகவும் அமைந்துவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் அவர் தேறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!
0
0