தனியார் நிதிநிறுவனம் மீது பல கோடி மோசடி புகார் : விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!!
Author: Babu Lakshmanan12 July 2022, 1:21 pm
தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பல கோடி மோசடி புகார் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் வீடு உள்பட திருச்சியில் பல்வேறு இடங்களில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல, வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது உறவினர் மாமியார் வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது, மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் வீட்டில் இல்லை.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவன இயக்குனர் ராஜா மற்றும் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, சோதனை மேற்கொள்ளப்பட்ட பிரபாகரன் ஏற்கனவே எல்பின் நிறுவனத்தில் ஏஜெண்டாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.