ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்… சோதனையில் சுற்றிவளைத்த போலீசார்.. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
25 April 2023, 8:30 am

திருச்சியில் நடைபெற்ற ஓபிஎஸ் மாநாட்டில் நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தான் இன்னமும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனச் சொல்லிக்கொண்டு, அதிமுக பெயரில் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகளும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளும் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக திரும்பிய நிலையில், திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர்.

அதன்படி, திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மாநாட்டிற்கு வந்திருந்த ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார். உடனே அவரை போலீசார் பிடித்து மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்று கைது செய்தனர். இதையறிந்து மேடைக்கு பின்னால் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பிடிபட்ட நபரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஓபிஎஸ் மாநாட்டில் நபர் ஒருவர் கத்தியுடன் சுற்றியது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!