ரவுடிகளின் கட்டுப்பாட்டில் தமிழகம்.. காவல்நிலையத்தில் திமுகவினர் மோதலுக்கு என்ன சொல்லப் போறீங்க..? CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி..!!
Author: Babu Lakshmanan15 March 2023, 5:06 pm
திருச்சியில் காவல்நிலையத்தில் திமுகவின் இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ். பி. ஐ., காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்பவர்கள் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி., சிவாவின் பெயர் இடம் பெறவில்லை.
எம்பி சிவாவின் வீடு உள்ள நியூ ராஜா காலனி வழியாக தான், அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்றுள்ளனர். அரசு திட்டத்தில் விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், ராஜ்யசபா எம்பியான சிவாவுக்கு அழைப்பு விடுக்காதது, அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால், அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர்.
ஆகையால், அமைச்சரும், அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அமைச்சரின் காருக்கு கருப்பு கொடி காட்ட முயன்றதாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இருதரப்பு திமுகவினரும் திரண்ட நிலையில், காவல்நிலையத்திற்கு மாறி மாறி அடித்துக் கொண்டனர். மேலும், இருக்கைகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருச்சி காவல் நிலையத்தில் இருதரப்பு திமுகவினர் மோதலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?, எனக் குறிப்ட்டுள்ளார்.