எனக்கு 26… உனக்கு 17… 11ம் வகுப்பு மாணவனை இழுத்துச் சென்று திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது..!!
Author: Babu Lakshmanan25 March 2022, 8:48 am
திருச்சி : திருச்சி அருகே தன்னிடம் படித்த மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், துறையூரில் அடுத்துள்ள தனியார் பள்ளியில் சிக்கத்தம்பூர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா. இவரும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனும் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை என்றும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆசிரியையின் செல்போனை டிரேஸ் செய்து பார்த்த போது, இருவரும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்
கலைச்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர் .
விசாரணையில் இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதும், பின்னர், திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியை சர்மிளாவின் தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர் மைனர் என்பதாலும், ஆசிரியை அதிக வயதுடையவர் என்பதாலும் பள்ளி ஆசிரியை சர்மிளா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவன் திருச்சி உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
பள்ளி ஆசிரியை தன்னிடம் படித்த மாணவனை திருமணம் செய்த சம்பவம் துறையூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.