ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்…விண்ணைப் பிளந்த ‘ரங்கா.. ரங்கா..’ கரகோஷம்… பக்தர்கள் பக்தி பரவசம்..!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 8:52 am

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் பக்தர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது. உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முக்கிய திருவிழாவான தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4:45 மணிக்கு
உற்சவர் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தேருக்கு புறப்பட்டு, சித்திரை தேர் மண்டபத்தில் எழுந்தருளி தொடர்ந்து காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்கு தேரில் மேஷ லக்னத்தில் நம் பெருமாள் எழுந்தருளினார்.

தொடர்ந்து 6:30 மணிக்கு தேரை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பட்டர்கள், பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷத்துடன் விண்ணைப் பிளக்க வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளிலும் தேரோட்டம் துவங்கிது.

இந்த தேரோட்டத்தில் திருச்சி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.

முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் தேரோட்டத்தின் போது நடந்த அசம்பாவித சம்பவத்தால் 11 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் தேரோட்ட பாதைகளில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

100 சதவீத பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்த பின்னரே இன்று தேரோட்டம் நிகழ்ச்சி துவங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு தேர் வீதி உலா ஒரு பகுதி முழுவதும் காலை முதல் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. தேரோட்டத்தையொட்டி ஸ்ரீரங்கம் பகுதி முழுவதிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொது மக்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…