ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரம்… கோவில் ஊழியர்கள் 3 பேர் கைது…. ஆந்திர பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan13 December 2023, 10:42 am
ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரத்தில் ஆந்திர பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசமாக திகழும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், ஐயப்ப பக்தர்கள் வழக்கம் போல இன்று காலை ரங்கநாதரை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். அப்போது பக்தி பரவசத்தில் மூலஸ்தானத்தில் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர். அந்த சமயம், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் செய்யக்கூடாது என கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் நாங்கள் பெருமாளை கோவிந்தா கோஷத்துடன் தான் தரிசிப்போம் எனக் கூறி, ரங்கநாதரை தொடர்ந்து கோஷமிட்டு வழிபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ரவி மற்றும் கோவில் பாதுகாவலர்கள் 3 பேரும் சேர்ந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒரு ஐயப்ப பக்தருக்கு ரத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது.
இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் ரத்தம் சொட்ட சொட்ட போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை சமாதானம் செய்தனர். அதேவேளையில், இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பின் நடை திறக்கப்பட்டது.
இதனிடையே, ஆந்திர பக்தர்கள் கோவிலில் இருந்த உண்டியலை ரொம்ப சத்தம் வரும் வகையில் தட்டிக் கொண்டே இருந்ததாகவும், இதனைக் கேட்ட ஊழியரின் தலையை பிடித்து உண்டியலில் மோதச் செய்து, பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுது. மேலும், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர பக்தர் சந்தாராவ் சந்தா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் கோவில் ஊழியர்களான பரத், செல்வா, விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஆந்திர பக்தர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னாராவ் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.