நண்பர்கள் போல பழகி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி.. சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 September 2024, 11:01 am
கோவை கலெக்டர் அலுவலக குழந்தைகள் நல அலுவலர் ராஜேஸ்வரிக்கு நேற்று காரமடை சிறுமுகை சாலை சிவா நகர் பகுதியில் சிறுமியை விபச்சாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வந்து உள்ளது.
இதுகுறித்து ராஜேஸ்வரி காரமடை காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். இப்புகாரின் பேரில் காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சிவா நகரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு காரமடையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது.
இதனை அடுத்து சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் அங்கு இருந்த பல்லடம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் (23), திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜதுரை (30), ஊட்டியைச் சேர்ந்த மோனிஷா (23), திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த கீதா (24), சென்னையைச் சேர்ந்த பவானி (24) உள்ளிட்ட 5 பேர் கும்பலை கூண்டோடு பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களை காரமடை காவல் நிலையம் அழைத்துச் சென்று இதுபோன்று வேறு சிறுமிகளை ஏதேனும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்களா ? எந்தெந்த பகுதிகளில் பாலியல் தொழில் நடைபெற்று உள்ளது? இதில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களையும் கைப்பற்றி, அதில் வந்த அழைப்புகளையும், போனில் இருந்து சென்ற அழைப்புகளையும் கண்காணித்தனர்.
போலீசார் விசாரணையில் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற ஐந்து பேரும் நண்பர்கள் என்பதும், இதில் கைது செய்யப்பட்ட ஊட்டியை சேர்ந்த மோனிஷா காரமடையில் சில மாதங்கள் தங்கி இருந்து உள்ளார்.
அப்போது, அவரது தங்கைக்கும்,15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் மூலமாக மோனிஷாவிற்கு சிறுமி பழக்கமாகி உள்ளார்.
இந்த பழக்கத்தின் மூலமாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்தே சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதும் தெரியவந்து உள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் எவ்வித தகவல்களும் கண்டறியப்படவில்லை.
இதனை அடுத்து ஐவர் மீதும் போக்சோ, சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்த காரமடை போலீசார் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமி கோவை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.