செந்தில் பாலாஜியை காப்பாற்ற முயற்சியா?…. பெண் அதிகாரி திடீர் இடமாற்றத்தால் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 9:40 pm

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்த உடனேயே ஆட்கொணர்வு மனுவை அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்ததும், இந்த கைது சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தும் கூட எந்தப் பயனும் இல்லாமல் போனது.

செந்தில் பாலாஜி வழக்கு

அதைத்தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து சென்னை சாஸ்திரிப் பவனில்
உள்ள தங்களது அலுவலகத்தில் விசாரணை நடத்தி கடந்த 12ம் தேதி மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர் படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே இதே லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் கடந்த 8-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இன்னொரு விசாரணையும் நடந்தது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 16ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு டோஸ்

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாலும், அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டும் ஜூலை மாதம் நான்காவது வாரத்தில்தான் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

அப்போது இதுவரை 120 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 58 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டி உள்ளது என்று காரணம் கூறி கூடுதல் கால அவகாசமும் கேட்டது. அதற்கு சுப்ரீம் கோர்ட் இதுபற்றிய விசாரணை ஆகஸ்ட் 8ம் தேதி நடக்கும் என்று தெரிவித்தது.

ஆனால் அன்றைய தினம் மனு தாக்கல் செய்த சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் செந்தில் பாலாஜி மீதான லஞ்ச வழக்கை விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதங்கள் எங்களுக்கு அனுமதி தாருங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்தது.

ஏற்கனவே ஜூலை 16ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவிட்டால், சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கால அவகாசத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

இதற்கு மனுதாரர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 6 மாத அவகாசம் கோரியதற்கு எரிச்சலுடன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா இருவரும் இந்த விவகாரத்தில் தமிழக டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் வந்து அவகாசம் கேட்கட்டும், உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து தெரிவிக்கப்படும். அடுத்த அரை மணி நேரத்தில் இதற்கான பதிலை
எங்களுக்கு தரவேண்டும் என்றும் எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் இருவரிடமும் கலந்து பேசி குறைந்த பட்சம் மூன்று மாதங்களாவது அவகாசம் கொடுங்கள் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதை நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்குமேல் எந்த கால அவகாசமும் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது.
செப்டம்பர் 30ம் தேதிக்குள், விசாரணையை முடித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். இல்லையென்றால் சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது உறுதி என்று கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நீதிபதிகள் அதிர்ச்சியும் அளித்தனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

இந்த நிலையில்தான் தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்த சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு துணைக் காவல் ஆணையர் நாகஜோதியும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுதான். அவர் மாநில குற்ற ஆவண காப்பகத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். அதேநேரம், அவர் வகித்து வந்த பதவிக்கு சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவின் இன்னொரு துணை ஆணையர் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் குறித்து வெளியுலகிலும் பரவலாக பேசப்படுகிறது. அவை இதுதான்.

STRICT OFFICER நாகஜோதி

“சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இருந்தபோது, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து, தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடந்துள்ளது. அதில், நாகஜோதியும் பங்கேற்று இருக்கிறார்.

அப்போது அவர், ‘அமைச்சர் தொடர்பான பண மோசடி வழக்கு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றுவிட்டது. அதனால் இந்த வழக்கில் என்னால் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது” என்று உறுதியாக கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனால், உயர் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு நாகஜோதி ஆளாகியும் உள்ளார். அதனால் எப்போது வேண்டுமென்றாலும், விசாரணையில் இருந்து, அவர் நீக்கப்படுவார் என அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் உடனடியாக பதவியில் இருந்து வெளியேறச் சொன்னால் அது சர்ச்சையாக மாறிவிடும் என்பதால் உடல் நலம் குறைவாக இருப்பதாக கூறி இரண்டு மாத காலம் மருத்துவ விடுப்பில் செல்லுமாறு அவரை காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

திமுக பிளான் சொதப்பல்

அதற்கும் நாகஜோதி ஒப்புக் கொள்ளாததால்தான் தற்போது அவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள். அப்போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தால் அதைக் காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட்டில் 6 மாத கால அவகாசத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் எளிதில் பெற்றிருக்க முடியும்.

தற்போது புதிய அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதால் இவருடைய வழக்கு விசாரணை செந்தில் பாலாஜி தரப்பினருக்கு ஆதரவாக அமைய வாய்ப்பும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் காவல்துறை இதுவரை காட்டி வந்த விசாரணையின் வேகத்தை தணிக்கும் விதத்திலும் புதிய அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

“போலீஸ் உயர் அதிகாரி நாகஜோதியை அதிகாரம் இல்லாத பதவிக்கு மாற்றி இருப்பது தமிழக காவல் துறை வட்டாரத்தில் விவாதத்துக்குரிய ஒன்றாகவும் மாறி இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முதலமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா?

“முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியாமல் இந்த இடமாற்றம் நடந்துள்ளது என்று சிலராலும் இல்லையில்லை இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே கிடையாது என்று இன்னொரு தரப்பினராலும் பேசப்படுகிறது.

ஏனென்றால் பெண் அதிகாரி, நாகஜோதியின் இடத்திற்கு வந்திருப்பவரின் பெயரும் ஸ்டாலின்தான். அவருடைய பெயரில் ஒரு உயர் அதிகாரியை மாநில போலீஸ் டிஜிபி இடமாற்றம் செய்யும் போது, அதுவும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிப்பதற்கு நியமிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இதுபற்றி கருத்து கேட்காமலா முடிவு செய்திருப்பார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விசாரணையை துணை ஆணையர் ஸ்டாலின் முடிக்க வேண்டும்.

ஆனால் அடுத்த 45 நாட்களுக்குள் புதிய போலீஸ் அதிகாரியால் இதை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவகாசம் கேட்க புதிய பிளான்

அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஸ்டாலின், ஏற்கனவே இரண்டு வருடங்களாக விசாரித்த அதிகாரியாலேயே செந்தில் பாலாஜி மீதான வழக்கை முடிக்க முடியவில்லை. நானோ புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் எனக்கு இன்னும் ஆறு மாத கால அவகாசம் வேண்டுமென்ற கோரிக்கையை செப்டம்பர் மாதம் 30 ம் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் வைப்பதற்கு வாய்ப்பும் உள்ளது.

எனவே இந்த வழக்கை இன்னும் எவ்வளவு காலத்துக்கு இழுத்தடிக்க முடியுமோ அதுவரை இழுத்துக் கொண்டேபோகலாம் என்ற நோக்கத்தில்தான் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பாக செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கும் புதிய அதிகாரியாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றே கருதுத் தோன்றுகிறது.

அல்லது நாங்கள் வழக்கில் தொடர்புடைய அவ்வளவு பேரிடமும் விசாரணை நடத்தி முடித்து விட்டோம். அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூட தமிழக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படலாம்.

ஆனால் அதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான் சந்தேகம். ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜியை தங்களது காவலில் எடுத்து 5 நாட்கள் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையும், இது தொடர்பாக நிச்சயம் எதிர் வாதத்தை வைத்து அறிக்கையை தாக்கல் செய்யும். ஏனென்றால் அரசு வேலைக்கு லஞ்சம் என்ற வழக்கில் கடந்த வாரமே அமலாக்கத்துறை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டது.

அதில் செந்தில் பாலாஜி 81பேரிடம் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதையும், சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதையும் உறுதி செய்து இருக்கிறது.

மேலும் அதிகாரியின் பணியிட மாற்றத்தை மேற்கோள் காட்டி விசாரணை குழுவை விரைவாக அமைக்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது விசாரணையைத் தடுக்கும் ஒரு தெளிவான முயற்சியாகவே தென் படுவதுதான்.

ஸ்டாலின் அரசுக்கு பலன் கிடைக்குமா?

இதனால் கூடுமானவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசின் கால அவகாச கோரிக்கையை ஏற்காமல் உடனடியாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் இந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிக்குள்ளாகவே முடிந்துவிடும். அப்போது வழக்கில் தீர்ப்பும் வெளியாகலாம்.

அதனால் எப்படி பார்த்தாலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதை ஆகஸ்ட் 8ம் தேதி நடந்த விசாரணையின்போதே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு தெளிவாக தெரிவித்தும் விட்டது. இதனால் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு புதிய போலீஸ் அதிகாரியை நியமித்திருப்பதால் எதிர்பார்க்கும் பலன் ஸ்டாலின் அரசுக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 486

    0

    0