திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்…? பாஜகவின் சமரச முயற்சி பலிக்குமா…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
14 November 2023, 9:21 pm

டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் பாஜக அணியில்தான் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று. இருவருக்கும் சேர்த்து 12 தொகுதிகளை ஒதுக்குவதற்கு டெல்லி மேலிடத்திடம் மாநில
பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை தமிழகத்தில் பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் கூட அக் கூட்டணியில் சேர்வதற்கு ஓபிஎஸ் தீர்மானித்து விட்டதால் அது அப்படியே பலிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இவற்றில் 8 தொகுதிகளில் அமமுகவும், நான்கில் ஓபிஎஸ் அணியும் போட்டியிட முடிவாகி இருப்பதாகவும் தெரிய வருகிறது.

அமமுகவுக்கு வட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், விருதுநகர் ஆகியவையும் ஓபிஎஸ் அணிக்கு தேனி, மதுரை, விழுப்புரம், நாமக்கல் ஆகிய நான்கு தொகுதிகளும் ஒதுக்கப்படலாம்.

முதலில் ராமநாதபுரம் தொகுதியில் டிடிவி தினகரன் நிற்கப்போவது 100 சதவீதம் உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் அந்தத் தொகுதியை பாஜக விரும்பி கேட்பதால் அதை அவர் விட்டுக் கொடுத்து விட்டதாக தெரிகிறது.

ttv dinkaran - updatenews360

இதனால் டிடிவி தினகரனின் பார்வை தற்போது தேனி பக்கம் திரும்பி இருக்கிறது. இது தொகுதி சீரமைப்புக்கு முன்பு பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1999ம் ஆண்டு அவர் இங்கே போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தவிர 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவருடைய கட்சி தேனியில் மிக அதிகபட்சமாக ஒரு லட்சத்து 44 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியதால் ராமநாதபுரம், சிவகங்கை தொகுதிகளை விட தேனியில் போட்டியிட்டால் எளிதில் வென்று விடலாம் என்றும் டிடிவி தினகரன் கருதுகிறார். ஆனால் ஓபிஎஸ்ஸோ தனது மகன் ரவீந்திரநாத்துக்காக தேனியை ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்.

அதிமுக சார்பில் அவரால் மகனை வேட்பாளராக நிறுத்த முடியாது என்பதால் பாஜகவின் சின்னத்தில் களம் இறக்கவும் தயாராகி விட்டார். அதேநேரம் ரவீந்திரநாத்தோ திமுகவில் இணைந்துவிட்டால் நமக்கு தேனி தொகுதியை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு வாங்கி விடலாம், வெற்றியும் உறுதி என்ற பிளானை கூறியுள்ளார்.

ஏனென்றால் பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருந்தவரை டெல்லி பாஜக மேலிடம் நம்மை கண்டு கொள்ளவே இல்லை, அதனால் அவர்களுடன் இணைந்து போட்டியிடுவது தேவையற்ற ஒன்று, அதிமுகவில் நமக்கு எதிர்காலமே இல்லாத நிலையில் நாம் இப்போதே திமுகவுடன் இணைந்து விடுவதுதான் நல்லது. அதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்ட முடியும். நாம் யார் என்றும் அவருக்கு காட்டுவோம் என்று ரவீந்திரநாத் ஆவேசமாக கூற அதை ஓபிஎஸ்சும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் மூலம்
திமுகவுடன் இணைவதற்கான ரகசிய பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக அரசியல் செய்துவரும் தங்க தமிழ்ச்செல்வன், தந்தை மகன் இருவரையும் திமுகவில் சேர்க்கக்கூடாது, தேனி தொகுதியையும் அவர்களுக்கு ஒதுக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளார். ஏனென்றால் திமுக சார்பில் தேனியில் போட்டியிடுவதற்கு அவரும்
தீவிரம் காட்டி வருவதால் இப்படி செக் வைக்க முயற்சிக்கிறார்.

இதையடுத்தே டிசம்பர் 2ம் தேதி தொடங்கி ஏழாம் தேதி முடிய தேனியில் நடக்க இருந்த 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளை
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி திருச்சி நகருக்கு மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

OPS - UPdatenews360

தேனியில் இந்த போட்டிகள் நடந்தால் போடிநாயக்கனூர் எம்எல்ஏவும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தையும், தேனி எம்பி ரவீந்திரநாத்தையும் அழைத்து அரசு நிகழ்ச்சியை நடத்தவேண்டியது வரும் என்பதால், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் இங்கே விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் வேறு ஒரு மாவட்டத்தில் நடத்திக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியதாகவும் அதன்படியே இந்த போட்டிகள் திடீரென திருச்சிக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வனும், ஓபிஎஸ்சும் எதிரும் புதிருமாகத்தான் இருந்தனர். அவர் திமுகவில் இணைந்த பிறகு இருவரும் ஒற்றுமையாகி விட்டதாக கூறப்பட்டது. ஓபிஎஸ் தாயார் மறைந்தபோதும், தன்னுடைய இல்லத் திருமணத்தின்போதும் தங்க தமிழ்செல்வன் நேரடியாக ஓபிஎஸ் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்து பேசினார்.

ஆனால், தற்போது ஓபிஎஸ் அதிமுக பெயரையும் கொடியையும் பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேனியில் தனது கொடியை பறக்க விட தங்கதமிழ்ச்செல்வன் முடிவு எடுத்திருப்பதாகவும் ஓபிஎஸ்சை மொத்தமாக ஓரங்கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அவர் தேனியில் நடக்க விடாமல் எடுத்த நடவடிக்கை என்கிறார்கள்.

மேலும் ஓபிஎஸ்சையும், ரவீந்திரநாத்தையும் திமுகவில் சேர்த்தால், நான் மீண்டும் அதிமுகவிற்கு சென்று விடுவேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் அறிவாலயத்திடம் ‘ஸ்ட்ராங்’ ஆக கூறியிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

டிடிவி தினகரனால் திடீரென எழுந்த இந்த விவகாரத்தால், அதிர்ச்சியடைந்த டெல்லி பாஜக மேலிடம் ஓபிஎஸ்சும் அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் திமுகவில் சேர்ந்து விடாமல் தடுக்க ஒரு புதிய சமரச திட்டத்தை தெரிவித்து இருக்கிறது. அதன்படி 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக தேர்தலில் போட்டியிட்டு தனக்குரிய வாக்கு வங்கியை உருவாக்கிய டிடிவி தினகரன் தேனியில் போட்டியிட வழி விடுங்கள். ரவீந்திரநாத்த்தை நாங்கள் ராஜ்யசபா எம்பி ஆக்குகிறோம் என்று உறுதி கூறியுள்ளது.

மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் 10 தொகுதிகள் வரை முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் தங்கள் கூட்டணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று கருதுவதால் இந்த வாக்குறுதியை ஓபிஎஸ்க்கு பாஜக கொடுத்து இருக்கிறது, என்கிறார்கள்.

இப் பிரச்சினையின் காரணமாகத்தான் கடந்த சில நாட்களாக டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கி இருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் அதற்கு பாஜக தலைமை முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

அதேநேரம் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் இப்பிரச்சனையில் மறைமுகமாக ஒன்று சேர்ந்துகொண்டு நாடகமாடுகிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதையும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது.

“அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் அதை நீக்கக்கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்துள்ள மேல் முறையீடு நவம்பர் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால் இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியபோது கோர்ட் விதித்த இடைக்கால தடையை மதித்து ஓபிஎஸ் அதிமுக கொடி கட்டாத காரில் பயணம் செய்தார், அதன் பிறகு ஒருங்கிணைப்பாளர் என்ற லெட்டர் பேடையே அவர் பயன்படுத்துவதில்லை என்று கூறப்பட்டாலும் கூட அவருக்கு
இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கடந்த ஏழாம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தள பக்கத்தில் அவரைப் பற்றிய சுய குறிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் மதிப்பதாக கூறினால் இதை ஏன் நீக்கத் தவறினார்? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுகிறது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை கோர்ட்டுகள் ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறப்பட்டாலும் கூட இந்த வழக்கின் மையமாக இது இருப்பதால் X வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சுய குறிப்பை மாற்றாமல் இருப்பது ஓபிஎஸ்க்கு நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும். இது நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படவும் படலாம்.

ஒருவேளை, இதை தெரிந்தேதான் அவர் ஒருங்கிணைப்பாளர் என்று இன்னும் தன்னை சொல்லிக் கொள்கிறாரோ என்னவோ தெரியவில்லை. எனவேதான் தனக்கு சாதகமாக கோர்ட்டு தீர தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை என்று நினைக்கும் ஓபிஎஸ், தனது மகன் ரவீந்திரநாத்தின் யோசனைப்படி, திமுகவில் சேர்வதற்கு முடிவும் செய்திருக்கிறார் என்று கருதவும் தோன்றுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் திமுக அரசை பாராட்டி பேசி வருவதால் அக்கட்சியில் முக்கிய பொறுப்பு தனக்கும், தன் மகனுக்கும் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் கூட அவர் திமுகவிற்கு தாவ நினைத்திருக்கலாம். நல்லவேளையாக டெல்லி பாஜக மேலிடம் அதற்கு ‘எண்ட் கார்ட்’ போட்டுவிட்டது.

என்றபோதிலும் டிடிவி தினகரனுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் இடையே எழுந்துள்ள தேனி மோதலை நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடியும் வரை சுமூகமாக கொண்டு செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் பாஜகவுக்கு உள்ளது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 395

    0

    0