டிடிவி தினகரன் தேர்தல் கணக்கு!அண்ணாமலைக்கு வைத்த ‘செக்’?…

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2023, 9:44 pm

தன்னை பாஜக அடியோடு கை கழுவி விட்டதே என்பதால் என்னவோ அதன் மீதான
கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக சமீப காலமாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பொதுவெளியில் மனம் நொந்து பேசி வருவதை காண முடிகிறது

டிடிவி தினகரன் கணக்கு

சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் எங்களுக்கு செல்வாக்குள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் வரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று கூறியிருந்தார். இப்படி சொன்னாலாவது டெல்லி மேலிட பாஜக தலைவர்கள் தன்னை தேர்தல் கூட்டணியில் இணைத்துக் கொள்ள மாட்டார்களா?என்று நினைத்து இதுபோல் அவர் கூறியிருக்க வாய்ப்பு உள்ளது.

தானும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், சசிகலா மூவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் தென் மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையில் கூட டிடிவி தினகரன் இப்படி சொல்லி இருக்கலாம்.

ஆனால் சசிகலாவோ அதிமுகவில் அனைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும் என்று கூறி வருவதால் தினகரனால் எதுவும் செய்ய இயலவில்லை.

அண்ணாமலை மீது கோபம்

அதனால்தான் தனது சித்தி, கை கொடுக்காமல் போனாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தலின்போது தன் பக்கம் வந்து விடுவார் என்று டிடிவி தினகரன் கணக்கு போடுகிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரை ஓபிஎஸ் நேரடியாக சென்று சந்தித்தபோதே இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இந்த நிலையில்தான், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

அதேநேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, அவருக்குள்ள கோபமும் வெளிப்பட்டுள்ளது.

DMK FILES 2 நான் பார்க்கவே இல்லை

அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்து அவர் கூறும்போது,”தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை ஊடகங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் ஒரு கட்சியின் தலைவர், அதனால் இந்த மக்கள் பயணத்தை மேற்கொள்கிறார் அவ்வளவுதான். அதுபோல அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து இரண்டாம் பாகம் வெளியிட்டதை, நான் இன்னும் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

அதாவது அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட DMK FILES-ன் இரண்டாம் பாகத்தை தினகரன் பார்க்கவில்லை, அதில் திமுக அரசின் மூன்று துறைகளில் 5600 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருந்ததையும் ஆறு அமைச்சர்களின் பினாமி சொத்து விவரங்களை ஆளுநரிடம் அளித்திருக்கிறோம். எனது நடைப்பயணத்தின்போது அந்த அமைச்சர்கள் யார் யார் என்பதை அம்பலப்படுத்துவேன் என்று அதிரடி காட்டியதையும் டிடிவி தினகரன், கேள்விப்படவில்லை என்பதும்தான் ஆச்சரியமான விஷயம். அதைவிட அண்ணாமலை மேற்கொள்ளும் நடை பயணத்தை அவர் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டது போலவே தெரியவில்லை.

அழைக்காததால் ஆவேசமா?

நடை பயண தொடக்கவிழாவுக்கு உங்களை அழைக்கவில்லையா?’ என்ற இன்னொரு கேள்விக்கு, “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே இல்லை. அதனால் எங்களை அண்ணாமலை நடை பயணத்துக்கு அழைக்கவில்லை. எனவே, உங்களின் கேள்வியே தவறானது” என்று ஆவேசமாக குறிப்பிட்டதன் மூலம் தன்னை அண்ணாமலை அழைக்கவில்லையே என்ற கோபம்தான் அதில் அதிகம் வெளிப்படுகிறது.

அதேநேரம் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மட்டும் தெள்ளத்தெளிவாக, “ஓ.பன்னீர்செல்வத்துடனான எனது சந்திப்பு நடந்த போதே இனிவரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்தே பயணிப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் நிலைப்பாடு குறித்து வருகிற டிசம்பரில் தெரிவிக்கப்படும்” என்று பதிலளித்து இருக்கிறார்.

அவர் இந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அவருடைய கூட்டணி தேர்தலில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே சொல்லவேண்டும்.

“டிடிவி தினகரன், ஓபிஎஸ்சுடன் கூட்டணி அமைத்து 2024 தேர்தலில் போட்டியிட்டால் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு இருவருமே அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டிடிவி – ஓபிஎஸ் கதி?

“2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டு சுமார் 23 லட்சம் ஓட்டுகளை வாங்கியது. அந்த நேரத்தில் அதிமுகவில் பெரும் குழப்பத்தை அவர் ஏற்படுத்தியதால் கிடைத்த ஓட்டுகள்தான் அவை. ஆனால் அவரை நம்பி அவருடன் சென்ற 18 எம்எல்ஏக்களின் கதியும் அந்த தேர்தலோடு அதோ கதியாகிப் போனது.

அதன்பிறகு அவருடைய கட்சியில் பெயர் சொல்லும் அளவிற்கு தலைவர்களோ, நிர்வாகிகளோ யாரும் இல்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானவர்கள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பி விட்டனர். அதேபோல ஆரம்பத்தில் இருந்த தொண்டர்களில் பத்தில் ஒரு பங்கினர் கூட இன்று அவர் பக்கம் கிடையாது.

2021 தமிழக தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டபோதும் கூட சுமார் 11 லட்சம் ஓட்டுகளை மட்டுமே அமமுகவால் பெற முடிந்தது. அதாவது இரண்டு வருடங்களுக்குள் தினகரன் கட்சி செல்வாக்கு சரி பாதியாக சரிந்து போனது.

சமுதாய ஓட்டுகள் கிடைக்குமா?

இப்போது அவர் ஒருவர்தான் கட்சி என்றும் ஆகிவிட்டது. அந்த உண்மை டிடிவி தினகரனுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் ஓ பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க அவர் விரும்புகிறார். இதற்கு முக்கிய காரணம் தங்களது சமுதாய ஓட்டுகள் முழுமையாக அப்படியே இந்த கூட்டணிக்கு கிடைத்து விடும் என்று தினகரன் கண்களை மூடிக்கொண்டு மனக்கணக்கு போடுவதுதான்.

அந்த அதீத நம்பிக்கையில்தான் அண்ணாமலை தன்னை நடை பயணத்திற்கு அழைக்கவில்லை என்பதை மனதில் வைத்து அவருக்கு ‘செக்’ வைப்பது போல பேசுகிறார்.

திமுகவின் B டீம்?

டிடிவி தினகரனால் 14 தொகுதிகளில் செல்வாக்கை நிரூபிக்க முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வேண்டுமானால் தஞ்சை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், ஆகிய ஐந்து தொகுதிகளில் நான்கு முதல் ஏழு சதவீத ஓட்டுகளை அவருடைய கூட்டணியால் பெற முடியும். டிடிவியும் ஓபிஎஸ்ம் நினைப்பது போல தங்களது சமூக வாக்குகளை என்னதான் குட்டி கரணம் போட்டாலும் அவர்களால் முழுமையாக பெற முடியாது என்பதுதான் எதார்த்த நிலை.

ஏனென்றால் கடுமையான மின் கட்டண, சொத்து வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக திமுக அரசு மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ள நிலையில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ம் திமுகவின் B டீம் போல செயல்படுவதால் இந்த சதவீத ஓட்டுகள் கூட வரும் தேர்தலில் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

பாஜகவுக்கு மிரட்டலா?

மேலும் 1996ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் மூவரும் வலிமையாக இருந்த நிலையிலும் கூட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்போது இவர்கள் சார்ந்த சமுதாய ஓட்டுகள் 8 முதல் 10 சதவீதம் வரை அதிமுகவுக்கு கிடைக்காமல் போனது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஓபிஎஸ்சை எந்த நிலையிலும் பாஜக கைவிட்டு விடாது. அப்போது நாமும் அதை சாக்காக வைத்து பாஜக கூட்டணிக்குள் நுழைந்து கொள்ளலாம் என்று நினைப்பதால்தான் ஓபிஎஸ்-ம், நானும் 2024 தேர்தலை கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று டிடிவி தினகரன் கூறுகிறார்.

இவர்களின் கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது நன்றாக தெரிந்திருந்தும் கூட பாஜகவை மிரட்டுவது போல் டிடிவி தினகரன்,
ஓ பன்னீர் செல்வமும் செயல்படுவதுதான் ஆச்சரியம் அளிக்கிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 337

    0

    0