டிடிவி தினகரன், OPS மகன் ‘தாமரை’யில் போட்டியா…? அண்ணாமலையின் சூசகத்தால் பரபரப்பு… தமிழக அரசியலில் திடீர் ‘ட்விஸ்ட்’…!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 8:00 pm

அண்மையில் பாஜக தலைவர்கள் அமித்ஷா, ஜே பி நட்டா இருவரையும்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் டெல்லியில் சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தியபோது அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

இதனால் அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. அதேநேரம் தேசிய பாஜக தலைமை அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த சந்திப்புக்கு பின்பு அதிமுக தலைவர்கள் பாஜகவை சீண்டும் விதமாக பேசுவதை தவிர்த்தே வருகின்றனர். ஆனாலும் பாஜகவின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் அதிமுக கூட்டணி பற்றி கூறும்போது “கொடுக்கின்ற இடத்தில் அதிமுக இல்லை. கைநீட்டி வாங்கும் இடத்தில் பாஜகவும் இல்லை” என்று தெரிவித்தது மீண்டும்
சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்தார். பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் இப்படி பேசியது அண்ணாமலைக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது அண்ணாமலையின் அனுமதியுடன்தான் இது பேசப்பட்டதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார்.

இப்பிரச்சனை ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் பாஜக- அதிமுக கூட்டணி பற்றி அண்ணாமலை சூசகமாக தெரிவித்த ஒரு தகவல் தமிழக அரசியல் களத்தில் இன்னும் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது வானொலி உரையை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள நடுக்குப்பத்தில் பாஜகவினர் பொதுமக்கள் கேட்டு ரசிக்கும் விதமாக நேரடி ஒலிபரப்பு செய்தனர்.

பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது சில விஷயங்களை குறிப்பிட்டு திமுகவை கடுமையாக சாடினார்.

அப்போது அவர் அண்மையில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் சொத்து குவிப்பு பட்டியல், அமைச்சர் உதயநிதியும் அவருடைய மச்சான் சபரீசனும் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் பற்றி நிறையவே பேசினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்த முழு விவரங்களையும் வெளியிட தயார் என்றும் அதிரடி காட்டினார்.

அதேநேரம் அதிமுக கூட்டணி பற்றி செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, “அண்ணன் எடப்பாடியார் அவர்களும், நானும் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெற்றி பெற்று நாற்பதையும் கைப்பற்றவேண்டும் என்ற விருப்பத்தை பாஜகவின் மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்தோம். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

பாஜக- அதிமுக கூட்டணிக்கு தலைமை யார் என்பது பற்றி பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கூட்டணியில் இருக்கும் அதிமுக பெரிய கட்சி. ஆனால் கூட்டணியின் முகம் மோடிதான். எனவே பாஜகவுக்கு சமமான மரியாதை நிச்சயம் இருக்க வேண்டும்.

எனக்கான பாதையை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதை ஏற்பது எனது கடமை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த அதிகாரம் தேசிய தலைமைக்குத்தான் உண்டு. அவர்கள் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவு எடுப்பார்கள். அப்போது கூட்டணி கட்சித் தலைவர்களை சமாதானப்படுத்தவேண்டும்.

சில தலைவர்கள் மோடியுடன் பயணித்திருக்கிறார்கள். அவர்களையும் விட்டுக் கொடுக்க முடியாது. அதேவேளை இன்னொரு கட்சியையும் தர்ம சங்கடப் படுத்தி விட முடியாது. அரசியல் என்பது கண்ணாடி மாதிரி. இது எல்லாவற்றையும் மனதில் கொண்டு கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.

அதிமுக கூட்டணி பற்றி அண்ணாமலை தெரிவித்து இருக்கும் தகவலை கூர்ந்து படித்து பார்த்தால் அவர் சூசகமாக சில விஷயங்களை கூறியிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

பிரதமர் மோடியுடன் சில தலைவர்கள் பயணித்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குறிப்பிடுவது ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஏனென்றால் பிரதமர் மோடி சொன்னதால்தான் 2017ம் ஆண்டு அதிகாரம் இல்லாத பதவி என்று தெரிந்தும் கூட துணை முதலமைச்சர் பதவியை நான் ஏற்றுக் கொண்டேன் என்று சில மாதங்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வமே கூறி இருந்தார்.

இப்போதும் கூட பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தன்னை கைவிட மாட்டார்கள் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அதனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு தேனி தொகுதியை பாஜக ஒதுக்கும் என்றும் ஓபிஎஸ் எதிர்பார்க்கிறார்.

அதேநேரம் இன்னொரு கட்சியையும் தர்ம சங்கடப் படுத்தி விட முடியாது என்கிற அண்ணாமலையின் வார்த்தைகளும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. அதாவது ஓபிஎஸ் மகனுக்கு தேனி தொகுதியை ஒதுக்கும்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என 10 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆறு தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ளன.

இதேபோல தேவேந்திர குல வேளாளர் வாக்குகளும் பல தொகுதிகளில் கணிசமாக காணப்படுகிறது. இவற்றை இழந்து விடக்கூடாது என்பதில் பாஜக மேலிடம் மிக உறுதியாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஏழு தொகுதிகளை கைப்பற்றி விடமுடியும் என்றும் பாஜக நம்புகிறது.

இதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியை பாஜக ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேபோல முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்கும் விதமாக அமமுகவின் டிடிவி தினகரனுக்கு ஒரு தொகுதியை பாஜக தனது பங்கில் இருந்து கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது. அது சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியாக இருக்கும் என்ற பேச்சு இப்போதே பரபரப்பாக அடிபடுகிறது.

“நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்காக திமுக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை முறியடிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நான்கரை ஆண்டுகள் பக்கபலமாக நின்றது. இதற்கான நன்றியை தெரிவிக்கும் விதமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பக்கமே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனாலும் டிடிவி தினகரனுக்கும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கும்
எம்பி சீட்டை பாஜக தன் பங்கில் இருந்து ஒதுக்க திட்டமிட்டு இருப்பதுதான் அதிமுகவிற்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி இருக்கிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு 2017 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் திமுகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை கலைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டவர். இன்றும் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் வசைபாடாத நாளில்லை.

அதேபோல 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது இபிஎஸ்க்கு ஓ பன்னீர்செல்வம் கொடுக்க ஆரம்பித்த குடைச்சல், கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த பின்பும் ஓயவில்லை. அது இன்னும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் கடைசி வரை செயல்பட்டால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தல் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டிலும் தங்களுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்பது திமுகவின் கணக்கு.

ஆனாலும் டிடிவி தினகரன் போலவே திரைமறைவில் திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு ஓபிஎஸ்சும் அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் நடத்தும் நாடகத்தை எந்த அதிமுக தொண்டனும் விரும்பவில்லை.

அதுவும் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள செல்லாமல் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை தனது ஆதரவாளர்கள் சூறையாடியதையும், ஆவணங்களை கொள்ளை அடித்ததையும் ஓபிஎஸ் அருகில் நின்று ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை அதிமுக தொண்டர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. மறக்கவும் இல்லை.

இந்த எதார்த்த உண்மையை டெல்லி பாஜக தலைமை உணர்ந்து இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுகளை ஒட்டுமொத்தமாக அது இழக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.

அதேநேரம் வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மண்டலங்களில் 29 தொகுதிகளில் மிக வலுவாக உள்ள அதிமுகவின் உறவை துண்டித்துக் கொள்ளவும் பாஜகவுக்கு மனதில்லை. தென் மாவட்டங்கள் சிலவற்றிலும் 5 தொகுதிகள் வரை அதிமுகவிற்கு வாக்கு வங்கி உள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

அதனால்தான் டிடிவி தினகரனுக்கும், ரவீந்திரநாத்துக்கும் பாஜக சார்பில் எம் பி சீட்டு ஒதுக்கப்பட்டு இருவரும் தாமரை சின்னத்திலேயே போட்டியிட டெல்லி மேலிடம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்குமே அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம்தான்.

அதனால்தான் அரசியல் என்பது கண்ணாடி மாதிரி. இது எல்லாவற்றையும் மனதில் கொண்டு கூட்டணி வைத்து முடிவு எடுப்பார்கள் என்று அண்ணா மலை கூறினாரா? என்பதும் தெரியவில்லை.

இப்பிரச்சனைக்கு அதிமுகவும் பாஜகவும் எப்படி தீர்வு காணப் போகின்றன என்பதை பொறுத்தே எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியும்”
என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!