இதையும் நீங்க விட்டு வைக்கலயா.. தலையாட்டு பொம்மைகளான ஊராட்சிமன்ற தலைவர்கள்… தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!
Author: Babu Lakshmanan1 April 2022, 12:13 pm
சென்னை : கூட்டுறவு சங்க தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்த தி.மு.க. அரசு, ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரத்திலும் கை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கூட்டுறவு சங்க தலைவர்களின் அதிகாரத்தைப் பறித்த தி.மு.க. அரசு, ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரத்திலும் கை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது.
ஊராட்சி அளவில் முடிவு செய்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களையெல்லாம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளையும் (BDO) ஒன்றிய குழுத் தலைவர்களையும் வைத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துகிறார்கள்.
இதன்மூலம் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பஞ்சாயத் ராஜ் சட்டம் வழங்கிய அதிகாரம் பறிபோகிறது. அதிகாரிகளிடம் அதிகாரத்தைக் குவித்து மொத்தமாக ஆதாயம் பெற தி.மு.க.வினர் துடிப்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது. இவ்விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார்.