துறையை மாற்றினால் ராஜகண்ணப்பன் புனிதராகி விடுவாரா..? இதுதான் சமூக நீதியை காப்பாற்றும் லட்சணமா..? திமுக மீது டிடிவி தினகரன் காட்டம்..!!!

Author: Babu Lakshmanan
29 March 2022, 8:07 pm

அடுக்கடுக்கான புகாருக்குள்ளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் மட்டும் செய்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்படுவதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு போக்குவரத்துத்துறை மீது வந்த அடுக்கடுக்கான லஞ்சப் புகார்கள் மற்றும் பிடிஓ ஒருவரை சாதி ரீதியாக நடத்தியது உள்ளிட்டவையே காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்து விட்டால் அவர் புனிதராகி விடுவார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறாரா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் திரு.ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? ‘எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திரு.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?!

ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Bigg Boss Tamil Season 8 This Week Double Eviction யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன்… பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளிப்பு : கடும் எதிர்ப்பு!