2ஜி வழக்கில் திருப்பம்.. உயர்நீதிமன்றம் காட்டிய பச்சைக் கொடி : அதிர்ச்சியில் ஆ.ராசா, கனிமொழி!
Author: Udayachandran RadhaKrishnan22 March 2024, 1:51 pm
2ஜி வழக்கில் திருப்பம்.. உயர்நீதிமன்றம் காட்டிய பச்சைக் கொடி : அதிர்ச்சியில் ஆ.ராசா, கனிமொழி!
காங்கிரஸ் –திமுக கூட்டணி ஆட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் திமுக எம்பி ஆ.ராசா. அப்போது திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி இருந்திருந்தார். அந்த சமயம் மத்திய தொலைதொடர்பு துறையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ வழக்கு விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்த வழக்கில் வழக்கு தொடர்பான போதிய ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோரை விடுதலை செய்து இருந்தது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனுக்களை ஏற்கக் கூடாது என்று கனிமொழி மற்றும் ஆ.ராசா தரப்பினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். இதனால் 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுமா என்பது குறித்து இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணை முடிவில், 2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை ஏற்கப்பட்டதாக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையானது வரும் மே மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.