பூமராங் போல திரும்பிய உதயநிதி சவால்?…ஆளுநர் கருத்துக்கு பெருகும் ஆதரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 9:06 pm

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாட்களுக்கு முன்பு கிண்டி ஆளுநர் மாளிகையில் குடிமை பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களிடையே பேசியபோது தெரிவித்த சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஆளுநருர் கருத்து : எழுந்த சர்ச்சை

அதற்காக அவரை திமுக காங்கிரஸ்,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை மிகக் கடுமையாக தாக்கி அறிக்கையும் விட்டன. அந்த ‘அட்டாக்’ இதுவரை இல்லாத ஒன்றாகவும், எல்லை மீறியதாகவும் இருந்தது.

மாணவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆளுநர் ரவி பதிலளித்த போது, “வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் பலவும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. நமது நாடு வேகமாக வளர்ந்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தவேண்டும் என்று பல்வேறு நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூடங்குளம் அணு உலை, விழிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் வெளிநாட்டு நிதிகள் பயன்படுத்தப்பட்டன. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான 2018 மே 22-ம் தேதி அன்று கலவரம் வெடித்து போலீஸ் துப்பாக்கி சூடும் நடந்தது. இதில் 13 பேர் உயிரிழக்கவும் செய்தனர். இதற்கு பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மாநிலம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது. அதன் பிறகுதான் மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளும் அப்போதைய அதிமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன.

தவிர 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரமாக முன்னெடுத்தன. இதனால் ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனை என்றாலும் திமுக ஆவேசமாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அமைச்சர் உதயநிதி சவால்

ஆனால் ஆளுநருக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விடுத்த காட்டமான அறிக்கையை விட தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி எல்லோரையும் மிஞ்சும் விதமாக ஒரு சவாலையும் விடுத்திருந்தார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தை வெளிநாட்டில் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு தூண்டிவிட்டதாக ஆளுநர் சொல்லியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுகிறார். வெளியில் வந்து ஒரு பொதுக்கூட்டத்திலே மாணவர்கள் மத்தியிலோ. தூத்துக்குடியிலோ இதேபோன்று அவரால் பேச முடியுமா? நான் சவால் விடுக்கிறேன். 100 நாட்கள் நடந்த ஒரு போராட்டம், மிகப்பெரிய போராட்டம். 13 பேரை சுட்டுக்கொன்று இருக்கிறார்கள்.

இது அதிமுகவும் சொன்னதுதானே. அப்போது முதலமைச்சராக இருந்தவர் என்ன சொன்னார். தெரியாது. டிவியில் பார்த்தேன் என்று சொன்னார். இதுக்கும் அதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. இதை கண்டிக்கிறேன். நீங்கள் ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பேசுகிறீர்கள். இது வன்மையாக கண்டித்தக்கது. தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள். அப்போது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியும்” என்று கொந்தளித்தார்.

ஆளுநருக்கு ஆதரவாக கருத்து

இதற்கிடையே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பொதுமக்கள், போக்குவரத்து தொழில் சார்ந்தவர்கள், ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் என பல தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடமும் பல்வேறு மக்கள் பிரதிநிதிகளிடமும் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும்படி மனு அளித்தும் வருகின்றனர்.

இந்த சூழலில்தான் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர், ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு தொண்டு நிறுவனத்தினர், மீனவ பிரதிநிதிகள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு அமைச்சர் உதயநிதிக்கும், திமுக அரசுக்கும் நச்சென்று பதில் தருவது போல அமைந்திருந்தது. ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது என்று கூறியதை உறுதி செய்வதுபோல இருந்ததையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

மூளைச் சலவை

தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் நிக்கோலஸ் கூறுகையில், “திரேஸ்புரம் மக்கள் படிப்பறிவு இல்லாத சமுதாய மக்கள் என்பதால் போராட்டக் குழுவினர் எங்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் கழிவுநீர் வருகிறது. கடலில் கலக்கிறது, மீன்கள் சாகிறது என்றெல்லாம் சொல்லி மூளை சலவை செய்து போராட்டம் செய்ய வைத்து விட்டனர்.

அதில், நானும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டேன். எங்களை தூண்டி விட்ட போராட்டக் குழுவினர் பாதியில் நின்று விட்டனர். இவர்களின் சதியால் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்துவிட்டனர். வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி எங்களை முட்டாளாக்கி விட்டனர். எனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால்தான் எங்களுடைய சந்ததிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவே அந்த ஆலையை திறக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

துளசி என்னும் அறக்கட்டளை நிறுவனர் தனலட்சுமி கூறுகையில், “2018ல் இருந்து இப்போது வரை நாங்கள் சொல்ல கூடியதைத் ஆளுநரும் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி நரன்பாய் ரத்வா என்பவர் உள்துறை இணை அமைச்சரிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக, தி அதர் மீடியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது புகார் வந்துள்ளனவா என கேள்வி எழுப்பினார்.

மத்திய அமைச்சர் எச்சரிக்கை

அதற்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘தி அதர் மீடியா’, ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்க வெளிநாட்டு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன.

அது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்துக்கு 3 கோடியே 54 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நிதி வந்துள்ளது. இதில் 2 கோடியே 79 லட்சம் ரூபாயை அந்நிறுவனம் பயன்படுத்தி இருக்கிறது. அந்த நிதிப் பயன்பாடு குறித்து விரிவான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மீதான குற்றாச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி இருக்கிறார்” என்ற ஒரு உண்மையை உடைத்தார்.

ஆளுநர் கூறியது உண்மை

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த நான்சி என்ற பெண் கூறுகையில், “போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மக்களை மூளை சலவை செய்து போராட்டத்திற்கு தூண்டியதாக ஆளுநர் தெரிவித்த கருத்து உண்மை. பொது மக்களை ஆளுநர் குறை கூறியதாக தவறாக திரித்து கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் நிதியை பெற்று அதன் மூலமாக வீராங்கனை அமைப்பைச் சார்ந்த பாத்திமா பாபு வழியாக பொதுமக்களுக்கு பணம் வழங்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மீன்பிடி தடைகாலம் என்பதால் அதனை போராட்டக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஸ்டெர்லைட்டின் மற்றொரு உற்பத்தி அலகு வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் தானே தவிர, தற்போது இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் இல்லை. எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய ஸ்டெர்லைட் நிறுவனம் தென் தமிழக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது. ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சமூக நல ஆர்வலர்களோ, “ஆளுநர் ரவிக்கு அமைச்சர் உதயநிதி சவால் விடுத்தது தேவையற்ற ஒன்று. தான் ஒரு இளைஞர் என்பதால் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு அவரிடம் கோப உணர்வு எழுந்ததால் அவர் இப்படி கூறி இருக்கலாம். எனினும் உதயநிதி போன்றவர்கள் இது மாதிரி உணர்ச்சி கொப்பளிக்க பேசுவதை இனியாவது தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இப்போது அதே தூத்துக்குடி மக்கள்தான் நேரடியாக களத்தில் இறங்கி, அதுவும் அமைச்சர் உதயநிதிக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே ஆளுநர் ரவி சொன்னது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்” என்கின்றனர்.

“இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி வந்தது என்பதை ஆளுநர் ரவி தூத்துக்குடியில் பொதுமக்கள் முன்பாகவோ, மாணவர்கள் முன்பாகவோ பேச முடியுமா அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா என்று அமைச்சர் உதயநிதி சவால் விடுத்திருந்தார்.

உதயநிதிக்கே திருப்பி வந்த சவால்!!

ஆனால் அதற்கு அவசியமே இல்லை ஆளுநர் சொன்ன அனைத்தும் உண்மைதான். அவர் ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டார் என்று அதே தூத்துக்குடி மக்கள் செய்தியாளர்கள் மத்தியில் கூறியிருக்கிறார்கள். அதுவும் 2018-ல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் திரேஸ்புரம் மக்களில் பலரும் அப்பகுதி மீனவப் பிரதிநிதிகளும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு தங்களை வழிநடத்திய தொண்டு நிறுவனங்கள் தவறான பாதையில் கொண்டு போய் விட்டன என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரும் இந்த அமைப்பினரின் செய்தியாளர்கள் சந்திப்பு அமைச்சர் உதயநிதியின் காதுகளிலும் விழுந்திருக்கும். அதனால் நாம் வீசிய பூமராங் நமக்கு எதிராகவே திரும்பி விட்டதே?… என்று எண்ணி அவர் மனம் குமுறி இருப்பார் என்பதும் நிச்சயம். இந்த அமைப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு உதயநிதி தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து தெளிவு பெறுவாரா? என்ற கேள்வியும் எழுகிறது” என அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 419

    0

    0